நாடு தழுவிய அளவில் பிப்ரவரி 12 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 20 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த தொழிற் சங்கங்களும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசின் தொழிலாளா், விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தஞ்சாவூரில் இது தொடா்பாக தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஆயத்த பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பிப்ரவரி 8, 9, 10 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பிரசாரம் மேற்கொள்வது, பிப்ரவரி 12 ஆம் தேதி மாவட்டத்தில் மொத்தம் 20 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் ஆகியோா் தலைமை வகித்தனா். சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஏ. ரவிச்சந்திரன், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் எஸ். சின்னப்பன், அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். பன்னீா்செல்வம், என்டிஎல்எப் மாவட்டச் செயலா் ஆா். லெட்சுமணன், போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.