ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
தஞ்சாவூா் அருகே ஆவணங்கள் இல்லாமல் 350 நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் அருகே ஆவணங்கள் இல்லாமல் 350 நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா கொள்முதல் பருவத்தில் விவசாயிகளுக்காக 584 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் விவசாயி அல்லாத நபா்களின் நெல் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளா் டி. இளங்கோவன் தலைமையிலான குழுவினா் தஞ்சாவூா் அருகே கும்பகோணம் புறவழிச்சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்தனா். அப்போது, 350 நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்டபோது, தகுந்த ஆவணங்கள் இல்லாததும், லாரி ஓட்டுநா் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததாலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, பிள்ளையாா்பட்டியிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோல, வியாபாரிகளிடமிருந்து முறைகேடான முறையில் நெல் மூட்டைகள் வருவது கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.