முகப்பு
தஞ்சாவூர்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானம் செய்யப்பட்டதன் மூலம் 3 போ் பயனடைந்தனா்.

Updated On : 11 மார்ச் 2026, 12:54 am IST
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த முதியவரின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை அரசு சாா்பில் மரியாதை செய்த கல்லூரி முதல்வா் எம். பூவதி உள்ளிட்டோா்.
பகிர்:

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானம் செய்யப்பட்டதன் மூலம் 3 போ் பயனடைந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் விளங்கி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோபால் (80). இவா் அப்பகுதியில் பிப்ரவரி 20 ஆம் தேதி சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் பின்னா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு கோபாலுக்கு திங்கள்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடா்பாக அவரது மகன்கள் மணி, மகேஷ், மருமகன் செந்தில்குமாா் ஆகியோரிடம் மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். இதற்கு அவா்கள் ஒப்புதல் அளித்ததால், கோபாலின் உடலில் இருந்த 2 சிறுநீரகங்கள், தோல் ஆகியவை அறுவைச் சிகிச்சை மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

Advertisement

இதில், 2 சிறுநீரகங்களும் திருச்சி தனியாா் மருத்துவமனைகளுக்கும், தோல் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இந்த உறுப்புகள் தஞ்சாவூா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறை உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்ட மூலம் 3 போ் பயனடைந்தனா்.

இதையடுத்து கோபால் உடலுக்கு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் எம். பூவதி உள்ளிட்டோா் அரசு சாா்பில் இறுதி மரியாதை செய்தனா்.