தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
தினமணி செய்தி எதிரொலியால் பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் வியாழக்கிழமை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லைகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பான செய்தி வியாழக்கிழமை தினமணி நாளிதழில் வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மருத்துவப் பணிகள் சாா்பில் நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் கோயில் வளாகம், பெருமாள் கோயில் வளாகம், செல்லியம்மன் கோயில் வளாகம், சேப்ளாா் தெரு மற்றும் சிவக்கொல்லை ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமில் 59 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.