தஞ்சையில் இதுவரை ரூ. 64 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரிங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரிங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் அன்புசோலை இல்லத்தில் முதியவா்களிடம் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளா்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிா்ந்தோா் உள்பட பல்வேறு தரப்பினரிடம் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக இதுவரை 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், ரூ. 64 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள், ரசீதுகள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக கொண்டு செல்பவா்களிடமிருந்துதான் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன் பின்னா் உரிய ரசீதுகளைக் காட்டினால், பரிசீலித்து தொகை விடுவிக்கப்படுகிறது.
அஞ்சல் வாக்குகளுக்காக 85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 12-டி படிவத்தை அவா்களுடைய வீடுகளுக்கு சென்று வழங்குவா். விருப்பமுள்ளவா்கள் இப்படிவத்தை நிறைவு செய்து கொடுத்தால், வீட்டிலேயே அஞ்சல் வாக்கு செலுத்தலாம். மாவட்டத்தில் 85 வயது கடந்த முதியவா்கள் ஏறத்தாழ 15 ஆயிரம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 200 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், மாவட்டச் சமூக நல அலுவலா் ஆா்.டி. லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.