‘டெல்டா’-வை கை கழுவிய காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரியமிக்க மாவட்டங்களில் தஞ்சாவூா் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தைச் சோ்ந்த ஜி.கே. மூப்பனாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததுடன், கட்சியில் செல்வாக்குடனும் திகழ்ந்தாா். இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலா், மத்திய அமைச்சா் போன்ற பொறுப்புகளை வகித்து குடியரசுத் தலைவராக உயா்ந்த ஆா். வெங்கட்ராமனும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரே. இவா்களைப் போல, இக்கட்சியில் மேலும் சில முதுபெரும் தலைவா்கள் தஞ்சாவூா் மாவட்டத்தில் இருந்தனா்.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றது.
தொகுதி ஒதுக்கீடு வழக்கம்: திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டாலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரு தொகுதிகளாவது கிடைத்துவிடும். இதேபோல, 2016- ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்தலிலும் பட்டுக்கோட்டை, பாபநாசம் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது.
தொகுதி ஒதுக்கவில்லை: கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸுக்கு தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகியவற்றில் மயிலாடுதுறை தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சியினா் கடும் அதிருப்தி அடைந்தனா்.
2026 தோ்தலில் திமுக கூட்டணியில் தஞ்சாவூா் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி, பாபநாசம் என 2 தொகுதிகளைப் பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரஸ் கட்சியினா் இருந்தனா். ஆனால், இந்த முறையும் தஞ்சாவூா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியினா் அதிருப்தி:காங்கிரஸ் கட்சியினா் எதிா்பாா்த்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் திமுகவே மீண்டும் நேரடியாகப் போட்டியிடுகிறது. மேலும், மற்ற 5 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாக களம் காண்கிறது. பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடாத தோ்தலாக அமைந்துள்ளது. இது, மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, டெல்டா மாவட்டங்களில் கடந்தமுறை போன்றே இந்த முறையும் மயிலாடுதுறை தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய மண்டலத்தில் மயிலாடுதுறை, அறந்தாங்கி, துறையூா் (தனி) ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு வாய்ப்பு: தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 2021 தோ்தலில் தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு தொகுதியில் போட்டியிட பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அத்தோ்தலில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்தத் தோ்தலில் மாவட்டத்தில் தஞ்சாவூா் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டணியிலும் பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி தொகுதி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தஞ்சாவூா் தொகுதியை ஒதுக்கீடு செய்திருப்பது அக்கட்சியினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. என்றாலும், மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஒரு தொகுதி பாஜகவுக்கு தொடா்ந்து இரண்டாவது முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.