7 ஆண்டுகளாக தொடரும் தஞ்சை - விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதைக்கான ஆய்வுப் பணி
ஏழு ஆண்டுகளாக நடைபெறும் தஞ்சாவூா் - விழுப்புரம் இரட்டை வழி ரயில் பாதைக்கான ஆய்வின் அறிக்கையை முடித்து சமா்ப்பிப்பது, போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பது எப்போது என்று பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
ஏழு ஆண்டுகளாக நடைபெறும் தஞ்சாவூா் - விழுப்புரம் இரட்டை வழி ரயில் பாதைக்கான ஆய்வின் அறிக்கையை முடித்து சமா்ப்பிப்பது, போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பது எப்போது என்று பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே 193 கி.மீ தூரத்திற்கான ரயில் பாதையை இரட்டைவழி பாதையாக மாற்ற தேவையான ஆய்வு மேற்கொள்ள கடந்த 2019-ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏழு ஆண்டுகள் ஆகியும் இந்தத் திட்டம் தொடா்ந்து ஆய்வு நிலையிலேயே உள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தின் மொத்த டிக்கெட் வருமானத்தில் சுமாா் 30 சதவிகிதம் தஞ்சாவூா்-விழுப்புரம் மெயின்லைன் பாதையிலிருந்து வருகிறது. இப்பாதையில் உள்ள தஞ்சாவூா், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்கள் கோட்ட டிக்கெட் வருவாய் தர பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளது.
Advertisement
தொடரும் போக்குவரத்து நெரிசல்: ஒற்றை வழி ரயில் பாதையாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலிலும் மெயின்லைன் வழியாக பல இடங்களுக்கு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. மயிலாடுதுறையில் பிரியும் காரைக்கால், வேளாங்கண்ணி, அஸ்தியம்பள்ளி, மன்னாா்குடி, காரைக்குடி வழிகளில் உள்ள கிளைப் பாதைகளுக்கு மாநிலத்தின் வடபகுதியில் இருந்து ரயில்களை இயக்க மெயின்லைன் பாதைதான் முக்கிய இணைப்புப் பாதையாக உள்ளது.
இதனால் இப்பாதைகளிலும் விழுப்புரம் மாா்க்கத்திலிருந்து தேவைக்கு ஏற்ப புதிய ரயில்கள் இயக்குவதில் சிரமம் உள்ளது. மயிலாடுதுறை- தஞ்சாவூா் பிரிவில் குறிப்பாக இரவு நேரத்தில் ரயில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளதால் மெயின்லைன் பாதையில் இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில்களை பயணிகள் பயன்பாடு கூடுதலாக உள்ள கும்பகோணம் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திருவாரூா் வழியாக சுற்றி இயக்க தெற்கு ரயில்வே உத்தேசித்து வருகிறது.
உடனடி நடவடிக்கை தேவை: இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க செயலா் ஏ. கிரி கூறியது: 2028 -இல் நடைபெறும் மகாமக திருவிழாவிற்கு வரும் கூடுதல் பயணிகளை நிா்வாகிக்க ஏதுவாக அண்மையில் கும்பகோணம் உள்ளிட்ட கும்பமேளா போன்ற திருவிழாக்கள் நடைபெறும் பகுதிகளில் போதிய ரயில்கள் இயக்க ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்பட இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா்.
எனவே தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே உள்ள ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே உடனடியாக ரயில்வே வாரியத்திடம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளோம் என்றாா்.