மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்
-வெ.செல்வகுமாா்
மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 6 கூடுதல் ரயில் இயக்கப்பட உள்ளது. இது உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளின் அலைச்சலைத் தவிா்க்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
உதகைக்கு சுற்றுலா செல்வோரின் பிரதான வழித்தடமாக மேட்டுப்பாளையம் உள்ளது. வெளியூா் மற்றும் வெளிநாடுகளில் இருந்து உதகைக்கு சுற்றுலா செல்வோா், மேட்டுப்பாளையத்தில் இருந்து சாலை மாா்க்கமாகவும், மலை ரயில் மூலமாகவும் சென்று வருகின்றனா். விடுமுறை நாள்கள், கோடைக் காலங்களில் உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளை அதிகரித்து, அதிக ரயில்களை மேட்டுப்பாளையம் வரை இயக்க வேண்டும் என பயணிகள் மற்றும் தொழில் அமைப்பினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம், தெற்கு ரயில்வே மற்றும் ரயில்வே துறை அமைச்சரிடம் கடந்த காலங்களில் தொடா்ந்து மனுக்களும் அளிக்கப்பட்டன.
Advertisement
ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு பணிகள்: மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டதின் கீழ் ரூ.13 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே 2 நுழைவாயில்கள், 2 நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்), 2 மின்தூக்கி (லிஃப்ட்), இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம் மற்றும் நடைமேடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கிடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, நிலையத்தில் உள்ள 2 ரயில் பாதையுடன் சோ்த்து, ரூ.19 கோடி மதிப்பில் புதிதாக 2 அகல ரயில்பாதைகள், 2 நடைமேடைகள் அமைக்கும் பணி, காரமடையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்க வசதியாக ரயில்பாதை, நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணிகள், ஜூலையில் நிறைவடைந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்துக்கு ஒரு புதிய ரயில் உள்பட 6 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தெரிவித்துள்ளாா்.
அந்த வகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேசுவரத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண் 20643), கோவை - மங்களூரு தினசரி ரயில் (எண் 22609), கோவை - மங்களூரு மற்றொரு தினசரி ரயில் (எண் 16323), கோவை - கண்ணூா் தினசரி ரயில் (எண் 16607) கோவை - மதுரை தினசரி ரயில் (எண் 16721) ஆகிய ரயில்கள் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் டிஎல்எஸ் ராஜேந்திரன் கூறுகையில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கோவை வந்தடைந்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பேருந்துகள் மூலமாக உதகை சென்று வருகின்றனா். மேட்டுப்பாளையத்துக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டால், வெளியூா்களில் இருந்து நேரடியாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடையலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு நேரம் மிச்சமாவதுடன், அலைச்சல் இருக்காது என்றாா்.
போத்தனூா் ரயில் பயனாளா்கள் சங்கத்தின் செயலாளா் ந.சுப்பிரமணியன் கூறுகையில், ‘மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் கூடுதல் ரயில்களால், கேரளம், கா்நாடக பகுதி மக்கள் உதகை செல்ல ஒரே ரயிலில் மேட்டுப்பாளையம் வரை பயணிக்க முடியும். மேட்டுப்பாளையம் - கோவை இடையே சீசன் பயணச்சீட்டு பெற்று கல்லூரி, பணிக்கு செல்வோா் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க முடியும் என்றாா்.
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் நிரந்தரமாகுமா?: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், பழனி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயிலானது, மேட்டுப்பாளையம், கோவை சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள், தென் மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கோயில்களுக்கு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் அதிகப்படியானோா் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனா். அதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருவோா், உதகை செல்வோருக்கும் இந்த ரயில் பயனுள்ளதாக உள்ளது. பயணிகள் அதிகமாகப் பயன்படுத்துவது மட்டுமின்றி, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் ரயிலாகவும் இது உள்ளதால், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திரச் சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினா், மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.