முகப்பு
திருச்சி

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது?

திருச்சி, ஏப். 27: ஆண்டுக்கு ரூ. 13 ஆயிரம் கோடியை ஈட்டித்தரும் எங்களை, பணி நிரந்தரம் செய்யக் கூடாதா?} 4 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை இது.   தமிழகத்தில் தனியார் நடத்தி வந்த

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:16 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:11 PM

திருச்சி, ஏப். 27: ஆண்டுக்கு ரூ. 13 ஆயிரம் கோடியை ஈட்டித்தரும் எங்களை, பணி நிரந்தரம் செய்யக் கூடாதா?} 4 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை இது.

  தமிழகத்தில் தனியார் நடத்தி வந்த மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் என்ற அதிமுக அரசின் உத்தரவால், 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலமாக ஏறத்தாழ 6,000}க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் தொடங்கப்பட்டன.

  இந்தக் கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் பார் உதவியாளர் நிலைகளில் பணிபுரிய மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் சுமார் 32,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement

  தொடக்கத்தில் மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ. 2,000}மும், விற்பனையாளருக்கு ரூ. 1000}மும் தொகுப்பூதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மதுக்கடைகள் மூலம் நல்ல வருவாய் கிடைத்ததால், மேற்பார்வையாளர், விற்பனையாளர்களுக்கு மேலும் ரூ. 1000 ஊதியத்தை அரசு உயர்த்தியது. இதனால் மேற்பார்வையாளர்கள் ரூ. 3,000 மும், விற்பனையாளர் ரூ. 2,000 மும் ஊதியமாக பெற்று வந்தனர்.

  2006}ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக அரசு இருமுறை ஊதியத்தை உயர்த்தியதால், மேற்பார்வையாளர்கள் தற்போது ரூ. 4,000, விற்பனையாளர்கள் ரூ. 2,800, பார் உதவியாளர்கள் ரூ. 2100 என்ற நிலையில் ஊதியத்தை பெற்று வருகின்றனர்.

  தொகுப்பூதியம் பெற்று வரும் தாங்கள் அரசு நிர்ணயித்தவாறு பணியாற்றியுள்ளதால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.

  ஆண்டுக்கு ரூ. 13,000 கோடி: தமிழகத்தில் "டாஸ்மாக்' மூலம் ஆண்டுக்கு ரூ. 13,000 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மக்கள் நலத் திட்டங்களுக்கு இந்தத் தொகை செலவிடப்படுகிறது.

  இவ்வாறு அரசுக்கு வருவாயை அதிகமாக ஈட்டித் தரும் எங்களது நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.

  பணி நிரந்தரம் அரசு மௌனம் சாதிப்பது ஏன்? என்று தெரியவில்லை என்றும் இவர்கள் புலம்புகின்றனர்.

  மேற்பார்வையாளர்களாகப் பணிபுரியும் பலர் பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் கல்வித் தகுதிக்குத்தக்கவாறு பணியமர்த்த வேண்டும் என்றும் இவர்கள் கோருகின்றனர்.

 "தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்  பணியிலிருந்த போது டாஸ்மாக் பணியாளர் கொல்லப்பட்டு அங்கிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் உயிரிழந்த பணியாளர் குடும்பத்துக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஊழியர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. பணிக்கும் பாதுகாப்பு இல்லை.

இதுமட்டுமல்லாமல் கடைகளில் வசூலாகும் பணத்தை கடையில் வைத்துச் செல்லவும் அச்சமாக இருக்கிறது. எனவே, பணியாளர்களின் நலன்கருதி சென்னையில் உள்ளது போன்று கடைகளுக்கே நேரடியாக சென்று பணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்' என்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.

முன்புபோல ஊக்கத் தொகை: நகர்ப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ. 9 லட்சம் என்றும், கிராமப்புறங்களில் உள்ள கடைகளுக்கு ரூ. 3 லட்சம் என்றும் மாத விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 முந்தைய ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தால் ஒரு சதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. சென்ற ஆண்டு எந்தத் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதோ, அதை விட கூடுதலாக விற்பனை செய்தால்தான் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பது அறிவிப்பாக உள்ளது.

 சில இடங்களில் விற்பனை இருக்கும். சில இடங்களில் விற்பனை இருக்காது. எனவே, முன்புபோலவே ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.