திருச்சி

1000 டன் வாழையை குளிர்விக்கும் வசதி கொண்டது ஆகஸ்ட் 2- வது வாரத்தில் செயல்படத் தொடங்கும் வாழை வணிக வளாகம்

விவசாயிகளுக்கு பயனை அளிக்கும் வகையில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகிலுள்ள திருச்செந்துறையில் ரூ. 4 கோடி

கு. வைத்திலிங்கம்

விவசாயிகளுக்கு பயனை அளிக்கும் வகையில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகிலுள்ள திருச்செந்துறையில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் செயல்படத் தொடங்குகிறது.

அனைத்து வகையிலும் வணிக ரீதியாக பயன்தரக்கூடியது வாழை. மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், வறட்சியின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இதன் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துவிட்டது.

திருச்சி மாவட்டத்தில் முசிறி, தொட்டியம்,  மண்ணச்சநல்லூர், அந்தநல்லூர், மணிகண்டம், லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் வாழை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாழை அறுவடைக்குப் பின்னர் பின்செய் நேர்த்தி மற்றும் சந்தை சார்ந்த உற்பத்தி போன்றவற்றில் விவசாயிகள் மத்தியில் போதியளவில் விழிப்புணர்வு இல்லாததால் 20 முதல் 30% வாழை உபயோகத்துக்கு முன்பே வீணாகிறது.

இந்த நிலையில், விவசாயிகள் வாழை அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் இழப்பை சரிகட்டி, விளைப் பொருள்களை குறைந்த செலவில் பாதுகாத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகிலுள்ள திருச்செந்துறையில் ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகத்தை அமைத்திருக்கிறது வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை.

குளிர்பதனக் கிடங்கு: இந்த வாழை வணிக வளாகத்தில் விவசாயிகள் தங்களது வாழையை 15 முதல் 30 நாள் வரை வைத்திருந்து, நல்ல விலைக்கு வரும் போது விற்பனை செய்யும் வகையில் குளிர்பதனக் கிடங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கிடங்கு 1000 டன் வாழையை பாதுகாத்து குளிர்விக்கும் வசதி கொண்டது.

வாழைத்தார்களைக் கழுவி சிப்பம் கட்டும் வசதிகள் கொண்ட அறைகள், வாழைத்தார்களைத் தரம் பிரிக்கும் அறைகள், பரிவர்த்தனைக் கூடமும் இந்த வளாகத்திலேயே உள்ளது. வாழை வணிக வளாகத்தில் தனியே 15 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் வாழை விவசாயிகள் தங்களது வாழைகளைத் தரம் பிரித்து, வகைப்படுத்தி மதிப்புக்கூட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் வாழைகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு அதிகரித்திருக்கின்றன. இந்த வளாகத்தின் மூலமாக வாழைச் சார்ந்த உணவு பதனிடும் தொழில்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கின்றன.

குறைந்த அளவில் வாடகை : இந்த வளாகம் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கான தொடர் செலவுகள் திருச்சி விற்பனைக் குழு மூலமாக மேற்கொள்ளப்படும். மேலும், இந்த வளாகத்திலுள்ள 15 கடைகளுக்கான கட்டணம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில்தான் இருக்கும். குறைந்த அளவிலேயே வாடகைக்  கட்டணம் இருக்கும், குளிர்பதனக் கிட்டங்கியில் மின்தடை பிரச்னை ஏற்படாத வகையில் ஜெனரேட்டர்களும் நிறுவப்பட்டுள்ளன என்றார் வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் வணிக மேம்பாட்டு மைய இயக்குநர் சந்திரசேகர்.

ஆக. 2-வது வாரத்தில்: தமிழக முதல்வரால் ஜூன் 30-ம் தேதி ஸ்ரீரங்கம் அரசு விழாவில் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்றும், அதற்குரிய நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் மூலம் வாழை விவசாயிகள், நுகர்வோர், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறக்கூடிய வசதி ஏற்பட்டிருக்கிறது என்று திருச்சி விற்பனைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT