வேக மாற்றம்... நேர மாற்றம்: அவதியில் மலைக்கோட்டை ரயில் பயணிகள்
ரயில்வே வாரியம் அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால், மலைக்கோட்டை விரைவு ரயில் மக்களின் அதிருப்தி ரயிலாக மாறி வருகின்றது.
ரயில்வே வாரியம் அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால், மலைக்கோட்டை விரைவு ரயில் மக்களின் அதிருப்தி ரயிலாக மாறி வருகின்றது.
திருச்சி மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகையில், அனைவரின் வரவேற்பையும் பெற்றது மலைக்கோட்டை விரைவு ரயில். திருச்சி - சென்னை இடையே சென்று வர திருச்சி பகுதிவாழ் மக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த ரயில் இயக்கப்பட்டது. கும்பகோணம் மார்க்கமான அகலப் பாதைப் பணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015-ஆம் ஆண்டு இறுதியிலிருந்து திருச்சியிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், ரயில்வே வாரியம் மேற்கொள்ளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் மலைக்கோட்டை ரயில் என்றாலே மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து இயக்கும் வகையில் மாற்றப்பட்ட பின்னர் முதல்கட்டமாக, அதிவேக துரித ரயில் என அறிவித்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
தற்போது ரயில் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்துள்ளதால் மேலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து இரவு 10.30-க்கும், சென்னையிலிருந்து இரவு 10.30 மணிக்கும் புறப்பட்ட ரயிலானது,
இப்போது, திருச்சியிலிருந்து இரவு 10.40-க்கும் சென்னையிலிருந்து இரவு 11.30-க்கும் மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் புறப்பட்டு தாம்பரத்தை கடக்க நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிறது. பயணச்சீட்டில் குறிப்பிடப்படும் நேரம் இரவு 12 மணிக்கு மேல் மறுநாளாகிவிடுகிறது. இதனால், பயணிகளுக்கும், பரிசோதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பயணிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தியும் இந்த பிரச்னை தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில், மேலும் ஓர் அதிரடியாக ரயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டமும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 4 நாள்களாக நடந்த இச் சோதனை எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்து.
இதுதொடர்பாக, திருச்சி நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சேகரன் மற்றும் சண்முகவேலு ஆகியோர் கூறுகையில், ரயில்வே வாரியத்தின் செயல்பாடுகள் பயணிகளைத் துன்புறுத்தும் வகையிலேயே உள்ளன.
போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இவைதவிர இன்னும் வேறென்ன மாற்றங்களை மலைக்கோட்டை விரைவு ரயில் சந்திக்கவுள்ளதோ என ஆதங்கம் தெரிவித்தனர்.