காவிரிப் பாலத்துக்குள் விழுந்து பெண் சாவு: விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை
திருச்சி -சென்னை புறவழிச்சாலையில் காவிரிப்பாலத்துக்குள் தவறி விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி -சென்னை புறவழிச்சாலையில் காவிரிப்பாலத்துக்குள் தவறி விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தைச் சேர்ந்த சுதாகர். இவரது மனைவி லலிதா(45). இவரது மகள் மோனிகா(20). தனியார் செவிலியர் கல்லூரியில் பயின்று வருகிறார். மகன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், லலிதா தனது மகள் மோனிகா மற்றும் உறவினர்களுடன் பாதயாத்திரையாக திங்கள்கிழமை இரவு புறப்பட்டு சமயபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
திருச்சி- சென்னை புறவழிச்சாலையில் பழைய காவிரிப் பாலத்தின் நடைபாதை பகுதியில் லலிதா உள்ளிட்டோர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்பகுதி இருட்டாக இருந்ததால் பாலத்தின் நடைபாதை சிலாப் உடைந்திருப்பது தெரியாமல் அதன்மேல் லலிதா கால் வைத்த போது தவறி காவிரிஆற்றுக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது மகளும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
இதையடுத்து உடன்வந்த உறவினர்கள் சப்தமிட்டு காவிரிஆற்றுக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். இரவு நேரம் என்பதால் அவர்களை மீட்கமுடியவில்லை. தகவலறிந்து வந்த திருச்சி தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்டனர். இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் லலிதா உயிரிழந்தார்.
இடுப்பில் பலத்த காயங்களுடன் மோனிகா திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விரைவில் விசாரணை: சம்பவப் பகுதிக்குச் சென்று விபத்து நிகழ்ந்தது குறித்து விசாரிக்கப்படும். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணைகள் தொடங்கி நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
அதிகாரி விளக்கம் : திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி- பாடாலூர் வரையிலான சாலையை ஒப்பந்தம் எடுத்து, சுங்கம் வசூலிக்கும் திருச்சி- பாடாலூர் டோல்பிளாசா நிறுவனம் தான் பராமரித்து வருகிறது. அவர்கள் உரிய முறையில் கவனம் எடுத்து கொள்ளாததால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஓரிரு நாள்களில் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் விபத்து நிகழ்ந்த பகுதியைப் பார்வையிட்டு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்.
அதன் அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்திருப்பதால், நடவடிக்கைகள் குறித்து அவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திருச்சிப் பிரிவு திட்ட இயக்குநர் சங்கர சுப்ரமணியன்.