திருச்சி

அறிவுசார்ந்த நூல்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டம்

அகில இந்திய அளவில் அறிவுசார்ந்த நூல்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் திட்டமிட்டு, அதற்கான பணிகளை முன்னெடுத்து செல்கிறது.

கு. வைத்திலிங்கம்

அகில இந்திய அளவில் அறிவுசார்ந்த நூல்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் திட்டமிட்டு, அதற்கான பணிகளை முன்னெடுத்து செல்கிறது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், கர்நாடக மாநிலம், மைசூருவில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தென் மண்டல மையம் இயங்கி வருகிறது.  ஏறத்தாழ 400 மொழிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனம், மொழிகள் குறித்து மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளைச் செயல்படுத்துதல், அந்த மொழிகளின் குறித்த ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. மேலும்,  குறிப்பிட்ட மொழிக்கு செம்மொழி தகுதியைத் தரலாமா அல்லது வேண்டாமா என்ற பரிந்துரையையும் மத்திய அரசுக்கும் அளிக்கும் பொறுப்பும் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. இதுபோல, மேற்கு மண்டலத்துக்கு புணேவிலும், வடக்கு மண்டலத்துக்கு பாட்டியலாவிலும், கிழக்கு மண்டலத்துக்கு புவனேசுவரத்திலும்  இயங்கி வருகின்றன.
ஏறத்தாழ 400 மொழிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும், 22 மொழிகள் பட்டியலுக்குள் உள்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து  இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மொழிநுட்பவியல் மையத்தின் தலைவரும், இந்திய மொழிகளின் தரவகத் திட்டத்தின் முதல்வருமான எல். ராமமூர்த்தி( படம்) கூறியது:
தற்போதைய நிலையில் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம்  சில முக்கியப் பணிகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. அதில், மலைவாழ் மக்களின் மொழிகளைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அறிவுசார்ந்த நூல்களை இந்திய அளவில் மொழிபெயர்ப்பது, இந்திய மொழிகளின் தரவகத் திட்டத்தைச் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயலாற்றி வருகிறது.
மலைவாழ் மக்களின் மொழிகளை மீட்கும் நடவடிக்கை :  மலைவாழ் மக்கள் பயன்படுத்திய மொழிகள் இன்று பல இல்லை.   அவர்களுக்கென்று எழுத்து வடிவம்  இருந்திருக்கிறது. எனவே, மலைவாழ் மக்களின் மொழிகளின் தனித்துவத்தை காக்கும் வகையில், அவர்களுக்காக இருந்த இலக்கண, இலக்கியங்களை மீட்டுருவாக்கம் செய்தல் போன்ற பணிகளையும் இந்திய மொழிகளுக்கான நடுவண்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்கலைக்கழகங்களுடன் எங்கள் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. சம்பந்தப்பட்ட மலைவாழ் மக்களுடன் பழகி, அவர்களின் வாழ்க்கை முறை, கல்வி மற்றும் இதரப் பணிகளின் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டு அதை ஆவணப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்கிறார் எல். ராமமூர்த்தி.
22 மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டம் :  அறிவுசார்ந்த நூல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், வங்கம், குஜராத்தி, ஆங்கிலம், மணிப்பூரி போன்ற  22 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதற்காக அந்தந்த மொழிகளைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு அதற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய மொழிகளின் தரவகத் திட்டம் :   இந்திய மொழிகளைத் தரகவப்படுத்துதல் பணியும் முக்கியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, நாம்  தமிழில் ஒரு சொல்லைக் கூறினால் அதை ஆங்கிலத்தில் பதிவாகி வருவது போன்று பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.  இதனை இயந்திர மொழிபெயர்ப்பு என்றும் கூட கூறலாம். இதுபோல,  ஒவ்வொரு வார்த்தைக்கும் இலக்கணத்தைப் பதிவு செய்து அதை தரவகத்தில் சேமித்து வைக்கும் திட்டத்தையும் ( டிஜிட்டல் டேட்டா)  உருவாக்கி வருகிறோம்.
உலகம் முழுவதும் பேசப்படக்கூடிய மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் 70 லட்சம்  சொற்கள் சொற்களஞ்சியத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாமும் அந்த எண்ணிக்கையை அடைய முடியாவிட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலாவது சொற்களை உருவாக்கி, அதை சொற்களஞ்சியத்தில் சேர்க்கும்வகையிலான பணிகளுக்கு இந்த தரகவத் திட்டம் பெரிதும் உதவியாக அமையும்.  இந்திய அளவில் 22 மொழிகளுக்கான  தரகவத்தையும் உருவாக்கும் பணி இதில் நடைபெற்று வருகிறது என்று மேலும் தெரிவித்தார் ராமமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT