காவிரித் தீர்ப்பை செயல்படுத்துவோம்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுத்துவோம் என்றார் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுத்துவோம் என்றார் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது சகோதரர்கள் ரேவண்ணா, பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோருடன் திருச்சி வந்த குமாரசாமி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் அருளால் இந்தாண்டு நல்ல மழை பெய்து விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னை தீர வேண்டும். காவிரிப் பிரச்னையில் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக மாநில ஆறுகள் வறண்டு கிடக்கின்றன.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுத்துவோம். அதே சமயத்தில் பேசியும் தீர்க்க வேண்டும். காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு 5 ஆண்டு காலத்தையும் முழுமையாக நிறைவு செய்யும். எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார் குமாரசாமி.
இதைத் தொடர்ந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவரை கோயில் உதவி ஆணையர் ரத்தினவேல், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அரங்கநாத சுவாமி, தாயார் சன்னதிகளில் தரிசனம் செய்த குமாரசாமி சமயபுரம் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.