முகப்பு
திருச்சி

ஜூனில் மேட்டூர் அணை திறக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய கம்யூ. தேசிய செயலர் து. ராஜா பேட்டி

தமிழகத்தில் ஜூன் மாதம் மேட்டூர் அணையைத் திறக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் இந்திய கம்யூ. தேசிய செயலர் து. ராஜா.

Updated On : 21 மே, 2018 at 7:37 AM
பகிர்:

தமிழகத்தில் ஜூன் மாதம் மேட்டூர் அணையைத் திறக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் இந்திய கம்யூ. தேசிய செயலர் து. ராஜா.
இதுகுறித்து அவர் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி : 
கர்நாடகத்தில் எடியூரப்பா நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமல் ராஜினாமா செய்தது ஜனநாயகத்துக்கு, மதச் சார்பற்ற சக்திகளுக்கு, இந்திய அரசியல் சட்டத்துக்கு, நெறிகளுக்கு கிடைத்த வெற்றி.  பெரும்பான்மை  இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது கடும் கண்டனத்துக்குரியது.  எப்படியாவது ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாஜகவின் செயல்பாட்டையே கர்நாடக  சம்பவம்  காட்டுகிறது.  மக்கள் தீர்ப்புப்படி நடப்பதை விடுத்து கோவா, மணிப்பூர், நாகலாந்து, உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க.  அதிகாரத்தை வைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் சாதனை என்று எதையும் சொல்ல முடியாது. 
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., என்ற பல்வேறு தேவையற்ற சீர்திருத்தங்களால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. 
சமூகக் கொள்கை, கல்விக் கொள்கைகளை தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பா.ஜ.க., அரசு மாற்றி வருகிறது. பாஜகவை அதிகாரத்திலிருந்து இறக்கும்விதமாக, நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். 
தமிழகத்தில் உள்ள அதிமுக, அரசு மக்களுக்கு ஏதும் செய்யாமல், மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. இடதுசாரிகள் தேர்தல் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்வோம். முதல் இரு அணிகளே எதுவென்று தெரியாத நிலையில், மூன்றாவது அணி பற்றி பேசத் தேவையில்லை. எஸ்.சி., எஸ்.டி., சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரு நபர் பெஞ்ச் அளித்த உத்தரவு, அந்தச் சட்டத்தை செயலற்றதாக மாற்றியுள்ளது. 
காவிரியை பொறுத்தவரை நமது இப்போதைய எதிர்பார்ப்பு, ஜூன், 12-ல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே.  அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மற்றபடி காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது, அதை தொடங்கிய பின்னரே தெரியவரும் என்றார் அவர். 
பேட்டியின்போது திருச்சி இந்திய கம்யூ., நிர்வாகிகள் இந்திரஜித்,  அயிலை சிவசூரியன், சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.