2-ஆவது சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டும்: புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி
மோடி தலைமையிலான அரசை தூக்கியெறிய மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து இரண்டாவது
மோடி தலைமையிலான அரசை தூக்கியெறிய மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்றார் புதுச்சேரி மாநில முதல்வர் வே.நாராயணசாமி.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
வேற்றுமையில் ஒற்றுமை காணுவதும், சமத்துவ, சகோரத்துவ, தனி மனித சுதந்திரம்தான் நமது மூச்சுக்காற்று. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மனுதர்மம் தான் அரசியலமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது பாஜக அரசின் நோக்கமாகும். சிறுபான்மையினர், தலித் மக்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுகிறார்கள். அரசியல் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பேராபத்தை நோக்கியிருக்கின்றன.
தங்களுக்கு எதிராக பேசுபவர்களைத் திட்டமிட்டு பழி வாங்குகிறார்கள். சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறைகள் மூலம் சோதனை நடத்தி அவர்களுக்குத் தொந்தரவு தருகின்றனர்.
ரூ.576 கோடிக்கு வாங்க வேண்டிய ரஃபேல் விமானத்தை ரூ.1,670 கோடி கொடுத்து வாங்குவது ஏன். இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் இதுவரை பதில் தரவில்லை. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியை தூக்கியெறிய மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராக இருக்க வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மற்ற நாடுகளைப் போல கடுமையான சட்டமாக இல்லாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் எளிமையான முறையில் மக்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட சட்டமாகும். சிறுபான்மை மக்களைக் காக்க வேண்டிய கடமை பெரும்பான்மை மக்களுக்கு இருக்கிறது என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டும் எனில் தேர்தலில் விகிதாச்சார முறை பின்பற்றப்பட வேண்டும். தென் மாநிலங்களில் ஒரு இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது. வெற்றி பெற வைக்க விடமாட்டோம். சமூக நீதியைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் செயல்படுவோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர்: சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு பெரும்பான்மை சமுதாயமான இந்துக்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில்லை. சிறுபான்மையினரே தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின்பங்கு அளிப்பரியதாகும். இஸ்லாமியர்கள், தலித்துகள் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தூக்கியெறியப்பட வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: இந்திய அரசிலமைப்புச் சட்டத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தை அடியோடு மாற்ற முயற்சிக்கின்றனர். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் கூறியிருக்கின்றது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை நீக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்: அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதே நமது விருப்பமாகும். அந்தச் சட்டத்தை பாதுகாக்கும் போது சில தீயசக்திகள வரலாம். அவ்வாறு வருபவர்களை அடையாளம் கண்டு, அகற்றுவதில் மெத்தனம் காட்டிடக் கூடாது. அவர்களை அகற்றுவதில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும் நிகழ்வாக இந்த மாநாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருவை மாற்றி, சட்டத்தை உயிர்ப்பு இல்லாமல் ஆக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இந்த சட்டத்தைப் பாதுகாக்க ஒரே வழி மத்திய, மாநில அரசுகள் ஒரே எண்ணம், நோக்கத்துடன் செயல்படும் அரசாக இருக்க வேண்டும். அந்த நிலையை அடைய அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களோடு இணைந்து சமத்துவ, சகோதரத்துவ ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினோம். ஆனால், தற்போது அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற அணிகளை இருக்கக்கூடாது என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. அதை நிறைவேற்ற பாஜக முயல்கிறது. எனவே, இதையெல்லாம் முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயலாற்றுவோம்.
திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி: ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை அவசர சட்டங்களாக நிறைவேற்றும் அரசாக மத்திய அரசு இருக்கிறது. இஸ்லாமியர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி. இஸ்லாமியர்களுக்கு இன்னல் என்று வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சியாக திமுக திகழும் என்றார்.
மாநாட்டுக்குத் தலைமை வகித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேசியது: நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதே எதார்த்தமான நிலையாக இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் அதற்கு ஆணி வேறாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். சமதர்ம, மதசார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்கும் நமது நாட்டை சர்வதிகார நாடாக மாற்ற முயற்சிக்கும் பாஜகவின் சதியை முறியடிப்பது மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். இந்த லட்சியத்தை நிறைவேற்ற நாம் ஓரணியில் திரள்வோம்.
இந்த மாநாட்டில், தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஹைதர் அலி உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, காலையில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் மாணவர் கருத்தரங்கம், மாலையில் இளைஞரணி அணிவகுப்பும், தொடர்ந்து சமுதாய அரங்கம் நடைபெற்றது. இதில், பாலபிரஜாபதி அடிகளார், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனர் இனிகோ இருதயராஜ், தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை கௌரவத் தலைவர் உமர் பாரூக் தாவூதி ஆகியோர் பேசினர். முன்னதாக, மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி குறித்த சமூகநீதி குறுந்தகடு வெளியிடப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொருளாளர் கோவை உமர், பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, செயலாளர் தொண்டி சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் பங்கேற்றனர்.