அதிமுகவை உடைக்கவும் முடியாது; திமுக ஆட்சியை பிடிக்கவும் முடியாது
அதிமுகவை யாராலும் உடைக்கவும் முடியாது, திமுகவினால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது என்றார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.
அதிமுகவை யாராலும் உடைக்கவும் முடியாது, திமுகவினால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது என்றார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.
திருச்சியில், துறையூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி. இந்திராணி-தங்கமணி தம்பதியரின் மகன் திருமணம் திங்கள்கிழமை கலையரங்கம் திருமணமண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
முன்னதாக, மாவட்ட எல்லையான பேட்டை வாய்த்தலையில் முதல்வருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில்,
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கழகத்தை திமுகவினர் அழிக்கமுயன்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அந்த சதிகளை முறியடித்து, உங்களின் (பொது மக்கள்) ஆதரவுடன் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி வருகிறோம். எம்ஜிஆரின் திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றியது போல், அவரது கனவுத் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தை ஆளக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான் என்ற வாய்ப்பினை மக்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். ஊழலுக்காக திமுக மீதுள்ள ஊழல் வழக்குகளை மறைத்து திசை திருப்பவே ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான். கருணாநிதி உயிருடன் இருக்கும் போதுகூட ஸ்டாலினை நம்பவில்லை. எனவேதான் செயல் தலைவராக ஆக்கினார். ஆட்சிப்பொறுப்பையும் தரவில்லை. அப்படியிருந்தும் அவருக்கு முதல்வர் பதவி மீது ஆசை வந்துவிட்டது. மக்கள் அந்த வாய்ப்பை அளித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அதைவிடுத்து பொய் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதிமுகவை உடைக்கவும் முடியாது, நீங்கள் (திமுக) ஆட்சியை பிடிக்கவும் முடியாது என்றார்.
மாவட்ட எல்லையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ப. குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உள்ளிட்டோர் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனையடுத்து சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர், திங்கள்கிழமை மேலும் சில திருமண விழாக்களில் பங்கேற்றுவிட்டு, புதுக்கோட்டையில் நடைபெறும் அதிமுக பிரமுகர் வைரமுத்து இல்லத் திருமண விழாவில் பங்கேற்கச் செல்கிறார். அதன்பின்னர் திருச்சி திரும்பும் அவர் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
அமைச்சர் இல்ல விழாவில்...: திருச்சி வருவதற்கு முன்னதாக கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இல்ல பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.