திருச்சி

திருச்சி-கரூர் வழித்தடத்தில் தொடரும் விபத்துகள்: சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்குவது எப்போது?

மிகக் குறுகலான சாலையில் தொடர்ந்து நிகழும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் திருச்சி- கரூர் சாலையில் குடமுருட்டி

கு. வைத்திலிங்கம்

மிகக் குறுகலான சாலையில் தொடர்ந்து நிகழும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் திருச்சி- கரூர் சாலையில் குடமுருட்டி முதல் திண்டுக்கரை வரை 11 கி.மீ. தொலைவுக்கு அகலப்படுத்தும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியை மற்ற நகரங்களுடன் இணைக்கும் சாலையாகத் திகழ்வது கரூர் சாலை.  
இந்தச் சாலை வழியாக கரூர், ஈரோடு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களிலிருந்து திருச்சி வரும் சாலையில் திண்டுக்கரை முதல் குடமுருட்டி வரையிலான 11 கி.மீ. தொலைவு சாலை குறுகலாக இருக்கிறது. 
மாநில நெடுஞ்சாலைக்குள்பட்ட இந்த சாலையின் ஒருபுறம் காவிரியாறும், மறுபுறம் ரயில் பாதையைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக குடமுருட்டிப் பாலப் பகுதி, கம்பரசம்பேட்டை தடுப்பணை அடுத்துள்ள பகுதி,   முத்தரசநல்லூர்- பழுவூர், திருச்செந்துறை, திண்டுக்கரை ஆகிய இடங்களில் விபத்துகள் அதிகம் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன.
எனவே, குறுகலான இந்தச் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதோடு, பழுதடைந்துள்ள குடமுருட்டிப் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி  இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருச்சி- கரூர் சாலையில் 11 கி.மீ. தொலைவிலான சாலையை அகலப்படுத்த ரூ.30 கோடியிலும், குடமுருட்டிப் பாலத்தை ரூ.10 கோடியில் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதில் எவ்வித முன்னேற்பாடு 
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.   இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் சாலை விரிவாக்கப் பணிகள் எப்போது மேற்கொள்ளப்படும் என்று கோரிக்கை விடுத்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்குத் தயாராகினார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சி-முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சாலை விரிவாக்கத்துக்கான புதிய திட்டக் கருத்துருவை அனுப்பி வைக்கும்படி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீண்டும் பணிகள் தொடங்கின.
நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி கோட்டப் பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையிலான குழுவினர் மறுமதிப்பீட்டுடன் கூடிய புதிய திட்ட அறிக்கை தயாரித்தனர். அதில், திருச்சி- திண்டுக்கரை வரையிலான 11 கி.மீ. தொலைவிலான சாலை ரூ.58 கோடியிலும், குடமுருட்டியில் ரூ.15 கோடியில் புதிய பாலம் கட்ட  மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு  தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
பணிகள் தொடங்குவது 
எப்போது:  திருச்சியைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளின் சாலைகள் நான்குவழிச் சாலைகளாக மாறிவிட்ட நிலையில், குறுகலாக, மோசமான நிலையில் அடிக்கடி விபத்து நேரிடும் பகுதியாக இருக்கும் குடமுருட்டி முதல் திண்டுக்கரை வரையிலான பகுதி வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, இரு சக்கர வாகன விபத்துகள் அதிகளவில் நிகழுமிடமாக இருக்கிறது. 
முந்தைய திட்ட மதிப்பீடுக்குப் பதிலாக, புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்திருப்பதாக அரசு கூறினாலும் இதுவரை எவ்விதப் பணிகளும் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சாலை அகலப்படுத்தும் பணியைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் மாவட்டச் செயலரும், சமூக ஆர்வலருமான பி.அய்யாரப்பன்.
அனுமதி, நிதி கிடைத்தவுடன் பணிகள் தொடக்கம்: சாலை அகலப்படுத்தும் பணிக்கு ரூ.58 கோடியும், குடமுருட்டியில் புதிய பாலம் கட்ட ரூ.15 கோடியும் வேண்டும் எனக் கோரி அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். 
மத்திய நெடுஞ்சாலைத் துறையின் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மத்திய அரசின் நிதி கிடைத்தவுடன், அரசு அனுமதியுடன் பணிகள் தொடங்கப்படும். குடமுருட்டிப் பாலம் முதல் திண்டுக்கல் வரையிலான சாலை தற்போது 7 மீட்டராக உள்ளது. இதை 10.5 மீட்டராக உயர்த்தி சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளோம். மேலும், காவிரியாறு, ரயில் தண்டவாளப் பகுதி, வாய்க்கால்கள் போன்றவை இப்பகுதியில் இருப்பதால், கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே பணிகள் தொடங்கப்படும். 
அரசு அனுமதி அளித்தவுடன் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார் நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி கோட்டப் பொறியாளர் கிருஷ்ணசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT