செப். 9-ல் தமிழ்த் தேசிய பேரியக்க மாநாடு
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை மையப்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் செப். 9-ல் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் .
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை மையப்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் செப். 9-ல் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் .
இதுதொடர்பாக அவர் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது:
திருச்சி மாநகரம் குறத்தெரு பகுதியில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை மையப்படுத்தி செ. 9-ல் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
மத்திய அரசு, அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமக்கள் குறித்த கணெக்கெடுப்பு போல பிற மாநிலங்களிலும் எடுக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. அதுபோன்ற குடிமக்கள் கணெக்கெடுப்பை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் எடுக்க வேண்டும். மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் கடந்த 1961ஆவது ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்தவர்கள்தான் தமிழகத்தின் (மண்ணின்) குடிமக்களாவர்.
அதன் பிறகு கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக குடிபெயர்ந்து வந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தோர் கிடையாது. அனைவரும் வெளி மாநிலத்தவர்கள். அவ்வாறு குடிபெயர்ந்து வந்தவர்களால் தமிழக மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவ்வாறு வந்தவர்களுக்கு தமிழகத்தில் குடும்ப அட்டை, வாக்காளர் உரிமை ஆகியவை வழங்கக் கூடாது.
வெளி மாநிலத்தவரை படிப்படியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து செப். 20 முதல் 30 வரையில் தமிழகத்தில் பரப்புரை பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியில் மாநகச் செயலர் மூ.த. கவித்துவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.