"முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தல்'
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகித்திலிருந்து உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகித்திலிருந்து உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, கட்சியின் பொதுச் செயலர் முகமது, துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் கூறியது: இஸ்லாமியர்களின் இறைவேதமாகிய திருக்குரானின் சிறப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், 2019, ஜனவரி 27-ல் விழுப்புரத்தில் மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்திலிருந்து உயர்த்தி வழங்குவதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார். எனவே, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீஜ் ஜமா அத்தின் சார்பில் தினமும் 150 பேர் களப்பணியில் ஈடுபட்டு, மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளைச் செய்தனர். பல்வேறு அம்சங்களில் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது. பண மதிப்பிழப்பால் பாமர மக்கள், சிறு வியாபாரிகளின் பாதிக்கப்பட்டனர் என்றனர் அவர்கள்.