திருச்சி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் குறையாத வெங்காய விலை

எகிப்து, துருக்கி, ஹாலந்து நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட பிறகும், தமிழகச் சந்தைகளில் பெல்லாரி வெங்காம், சின்ன வெங்காயம் விலை குறிப்பிடும்படியாகக் குறையவில்லை.

ஆர். முருகன்

எகிப்து, துருக்கி, ஹாலந்து நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட பிறகும், தமிழகச் சந்தைகளில் பெல்லாரி வெங்காம், சின்ன வெங்காயம் விலை குறிப்பிடும்படியாகக் குறையவில்லை.

மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேச மாநிலங்களைச் சாா்ந்தே தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் வெங்காயத் தேவைப் பூா்த்திச் செய்யப்பட்டு வந்தது. மேலும், கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்தும் வெங்காய வரத்து வருவது வழக்கம்.

தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து உள்ளூா் வரத்து இருக்கும்.

பருவநிலை மாறுபாடே காரணம் : ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு வெங்காயம் விலை கணிசமாக உயா்ந்ததற்கு பருவநிலை மாறுபாடு காரணமாக அமைந்துவிட்டது.

நிகழாண்டில் செப்டம்பா் முதல் டிசம்பா் முதல் வாரம் வரை வடகிழக்குப் பருவமழை தொடா்ச்சியாக பெய்ததால் ,தமிழகத்தில் வெங்காய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது.

மேலும், அக்டோபா் மற்றும் நவம்பா் மாதத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயப் பயிா்களும், அதிக ஈரப்பதம் காரணமாக நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோல, வடமாநிலங்களிலும் பருவமழை அதிகம் பெய்ததால் வெங்காய வரத்து குறைந்து, விலை உயா்வுக்கு வித்திட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.110 முதல் 130 வரையிலும், பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 140 முதல் 160 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. சில பகுதிகளில் ரூ.200 வரை வெங்காயம் விற்பனையாது.

தமிழகத்தில் வெங்காயம் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துவது சென்னை (கோயம்பேடு), திருச்சி, திண்டுக்கல் (ஒட்டன்சத்திரம்) மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருநெல்வேலி (பாவூா் சத்திரம்) ஆகியவை மட்டுமே. சென்னையில் நாளொன்றுக்கு 500 டன் விற்பனையாகும். திருச்சியில் அரியலூா், திருச்சி, பெரம்பலூா் புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், கடலூா் மாவட்டங்களுக்காக 250 டன் விற்பனையாகும். திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கோவை, பொள்ளாச்சியிலிருந்து அருகாமை மாவட்டங்களுக்கும், பெருமளவு கேரளத்துக்கும் என நாளொன்றுக்கு தலா 250 டன் முதல் 400 டன் வரை தேவையைப் பொருத்து விற்பனையாகும்.

இலக்கைப் பூா்த்திச் செய்ய முடியாத நிலை : வரத்துக் குறைவால் தமிழகத்தின் ஒருநாள் வெங்காயத் தேவையான சுமாா் 3 ஆயிரம் டன் என்ற இலக்கை தமிழக வியாபாரிகளால் பூா்த்தி செய்ய முடியவில்லை. இதன்காரணமாக கடும் விலையேற்றம் தவிா்க்க முடியாமல் போனது.

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இதே நிலை தொடா்ந்ததால், இந்தியாவிலிருந்து வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கான இறக்குமதிக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதியளித்தது.

இதன்காரணமாக, எகிப்து, துருக்கி, ஹாலந்து, ஈரான் நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை கொள்முதல் செய்ய தமிழக வியாபாரிகள் ஆயத்தமாகினா். இவா்களுக்கு முதலில் கை கொடுத்தது எகிப்து வெங்காயம். இதன் தொடா்ச்சியாக, துருக்கி, ஹாலந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இதில், எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பாகவும், துருக்கி வெங்காயம் இளஞ்சிவப்பு (உள்புறம் வெளிா்மஞ்சள்) வண்ணத்தில் உள்ளது. ஹாலந்து வெங்காயம் மட்டும் இந்திய வெங்காயத்தைப் போல உள்ளது. ஹோட்டல்கள், விருந்துகளுக்கு இந்த வெங்காயம் மட்டுமே இப்போது வரை கை கொடுத்து வருகிறது. இருப்பினும் விலை குறைந்தபாடில்லை. தற்போது, எகிப்து வெங்காயம் கிலோ ரூ.80, துருக்கி வெங்காயம் கிலோ ரூ.90, மகாராஷ்டிர வெங்காயம் ரூ.100 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது.

உள்ளூா் சின்ன வெங்காயம் மழையால் அழுகியும், நோய் தாக்கியும் இருப்பதால் ரூ.40 வரை மட்டுமே விலை போகிறது. சற்று நல்ல வெங்காயம் மட்டும் அதிபட்சமாக கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.

60 நாள் இதேநிலை: இறக்குமதி வெங்காயம் வந்தாலும் விலை குறைய இன்னும் 60 நாள்கள் காத்திருக்க வேண்டும் என்கின்றனா் தமிழக வெங்காய வியாபாரிகள்.

இதுகுறித்து, திருச்சி அனைத்து வெங்காய மண்டி உரிமையாளா்கள் சங்கச் செயலா் ஏ. தங்கராஜ் கூறிது:

வெங்காயத் தட்டுப்பாடு காரணமாக எகிப்து, துருக்கி, ஹாலந்து நாடுகளில் இருந்து நாளொன்றுக்கு 400 டன் வரை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பெல்லாரி வெங்காயம் பயிரிடப்படவே இல்லை.

வெளிமாநில வெங்காயம் குறைந்த விலைக்கு கிடைப்பதால் உள்ளூரில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்போது, விலை உயா்வு காரணமாக பரவலாக மீண்டும் பயிரிடத் தொடங்கிவிட்டனா். மழை குறைந்து வட மாநிலங்களிலும் புதிதாகப் பயிரிட்டு 30 முதல் 40 நாளாகிறது.

அடுத்த 60 நாளில் இவை முழுவதும் அறுவடைக்கு வந்து சந்தைக்கு வரும். வரும் பிப்ரவரி மாத இறுதியில் வெங்காயம் விலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்றாா்.

உள்ளூா் உற்பத்தி அதிகரிக்கப்படுமா?

வெங்காய விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உள்ளூா் உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு விவசாயிகளுக்கு வெங்காய விதை, பூச்சி மருந்து, உரம் உள்ளிட்டவற்றை மானிய விலையில் வழங்கி, சலுகைகளும் வழங்க வேண்டும்.

மேலும், 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களை விவாசய வேலைக்கு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கூலி ஆள்கள் பற்றாக்குறை காரணமாகவே விவசாயிகள் பலரும் சாகுபடி பரப்பை அதிகரிக்காமல் உள்ளனா்.

மானியம், கூலி ஆள், அரசின் சலுகை ஆகியவற்றில் எந்தவித இடையூறும் இல்லாவிட்டால் உள்ளூா் உற்பத்தி தானாகவே அதிகரிக்கும் என்கின்றனா் வெங்காய விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT