திருச்சி

மாநகராட்சியுடன் இணைத்தும் அடிப்படை வசதிகள் இல்லை: திருச்சியில் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க 2 லட்சம் பேர் முடிவு

திருவெறும்பூர் பேரூராட்சிப் பகுதி, காட்டூர், எல்லக்குடி ஊராட்சிகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு

சி.வ.சு. ஜெகஜோதி

திருவெறும்பூர் பேரூராட்சிப் பகுதி, காட்டூர், எல்லக்குடி ஊராட்சிகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும், போதுமான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படாததால்  இப்பகுதிகளில் வசிக்கும் 2 லட்சம் பேர் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி கடந்த 1994 ஆம் ஆண்டில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவெறும்பூர் பேரூராட்சி,  காட்டூர், எல்லக்குடி ஊராட்சிகள் மாநகராட்சியுடன் கடந்த 2011 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டன. இதன் மூலம் மேலும் 5 புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டதால் மாநகராட்சி தற்போது 65 வார்டுகளைக் கொண்டுள்ளது.
பெல் தொழிற்சாலை,  திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகம், சேசஷாயி தொழில்நுட்பக் கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், எறும்பீசுவரர் கோயில் போன்ற ஆன்மிகத் தலங்கள் கொண்ட இப்பகுதியில் 25 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் 2 லட்சம் பேர் வரை வசித்து வருகின்றனர்.
மாநகராட்சியுடன் இணைத்தும் எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை செய்துத் தரப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 
இதனால் வேறுவழியில்லாமல் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பு செய்து என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். சுப்பிரமணியன், பி.லெனின், ஏ.நடராஜன் ஆகியோர் கூறியது:
காட்டூர், எல்லக்குடி, திருவெறும்பூர் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கும் முன்பு குடிநீர் வரி ஆண்டுக்கு ரூ.360 செலுத்தினோம். கடந்த 2013 ஆம் ஆண்டில் 5 மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.1960 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. 
இப்பகுதி மக்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை குடிநீர் வரியைச் செலுத்துகிறார்கள். குடிநீர் வரியை 5 மடங்காக உயர்த்திய மாநகராட்சி,  மற்றப் பகுதிகளுக்கு வழங்குவதுபோல் இல்லாமல், இப்பகுதிகளுக்கு ஒரு நாள்விட்டு ஒரு நாள்தான் குடிநீர் விநியோகம் செய்கிறது.  
ரூ.220 ஆகஇருந்த வீட்டுவரி, இந்த நிதியாண்டில்  13 மடங்கு உயர்ந்து ரூ.2800 ஆக உள்ளது. இக்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.  2010-ஆம் ஆண்டிலேயே திருச்சி- தஞ்சாவூர்  நான்குவழிச்சாலைப் பணிகள் முடிவடைந்த நிலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14 கி.மீ. தொலைவுக்கு அமைக்க வேண்டிய அணுகுச்சாலைக்கான பணிகளும் இல்லை. இதனால் இப்பகுதியில் 5,000-த்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகளும் நிகழ்ந்திருக்கின்றன.
காட்டூர்- துவாக்குடி இடையிலான 10 கி.மீ. தொலைவு சாலையில் மட்டும் நிகழ்ந்த விபத்துகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அணுகுச்சாலை அமைக்கப்படாததால் இந்த சாலை  
மரணச்சாலையாக மாறிக் கொண்டிருக்கிறது. 
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலுள்ள எந்த குடியிருப்புகளிலும் தரமான சாலைகள் இல்லை. அனைத்தும் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. 
மழைக் காலங்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் உள்ளன. அடிப்படை வசதிகளை செய்துத் தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை.
 வரிகளை அதிகமாக உயர்த்தி வசூலிக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதால், இவை அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பதற்காக வரும் மக்களவைத் தேர்தலை 2 லட்சம் மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர் அவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT