திருச்சி

சவூதியில் வேலைக்குச் சென்ற கணவர் மாயம்: மீட்டுத்தரக் கோரி மனைவி மனு

DIN

ஆடு மேய்க்கும் தொழிலாளியாக சவூதி அரேபியாவுக்குச்  சென்று, 3 ஆண்டுகளாக தொடர்பில்லாமல் உள்ள தனது கணவரை இந்தியத் தூதரகம் மூலம் மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் துறையூரைச் சேர்ந்த பெண் மனு அளித்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோவிந்தபுரம் மேற்குத்தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவருக்கு மகேசுவரி என்ற மனைவியும், புவனேசுவரி (17), மகேந்திரன் (15) என்ற மகன், மகளும் உள்ளனர். 
விவசாய கூலித் தொழிலாளியான முருகேசன், வெளிநாடு சென்றால் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில், சவூதி அரேபியாவுக்கு செல்ல முயன்றுள்ளார்.
இதற்காக பெரம்பலூரிலுள்ள டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் சவூதி அரேபியாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு முயற்சித்தார். அந்த நிறுவனத்தினர் ரூ.2 லட்சம் அளித்தால் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, முருகேசனிடம் தொகையைப் பெற்று சவூதி அரேபியாவுக்கு 2016-இல் அனுப்பி வைத்துள்ளனர்.
 அங்கு சென்று 6 மாதங்கள் மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், பின்னர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. பணமும் அனுப்பவில்லை.
இதையடுத்து மகேசுவரி டிராவல் ஏஜென்சி நிறுவனத்துக்குச் சென்று விசாரித்தபோது, சவூதி அரேபியாவில் உள்ள முகவரின் தொலைபேசி எண்ணை அளித்துள்ளனர். ஆனால், அந்த முகவரோ இந்தியத் தூதரகம் மூலம் முயற்சித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறிவிட்டாராம்.
கடந்த 3 ஆண்டுகளாக எந்தவித தகவலும் இல்லாததால் முருகேசனுக்கு என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். இதையடுத்து, முதல்வரின் தனிப்பிரிவு, திருச்சி மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து தனது மகளுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த மகேசுவரி, ஆட்சியரைச் சந்தித்து புகார் தெரிவித்தார். கணவர் இல்லாமல் 2 குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்படுவதாகவும், 100 நாள் வேலை கூட முறையாக கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் கூறினார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT