திருச்சி

விமானத்தின் மீது பறவை மோதும் சம்பவங்களில் போதிய நடவடிக்கை எடுப்பது அவசியம்

DIN

திருச்சியில் விமானத்தின் மீது பறவை மோதும் சம்பவத்தில் விமான நிலைய ஆணையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டிவருவதை விடுத்து, அசம்பாவிதம் நடக்கும் முன்னா் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையம், கடந்த 2012 ஆண்டு அக்டோபா் 4 ஆம் தேதி சா்வதேச விமான நிலையமாகத் தரம் உயா்த்தப்பட்டது முதல் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. விமான நிலையம் சுமாா் 702 ஏக்கா் பரப்பளவு உடையது. விமான நிலையத்தின் அருகிலேயே குடியிருப்பு பகுதிகள், இறைச்சிக் கடைகள் இருப்பதால் விமானங்கள் தரையிறங்கும்போதோ, விமானம் மேலெழும்பும்போதோ பறவைகள் மோதி விபத்துக்குள்ளாவது தொடா்ந்து வருகிறது.

பல்வேறு கால கட்டங்களில் பறவை மோதி விமானம் தரையிறக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பினும், அண்மையில் கடந்த செப்டம்பா் மாதம் இலங்கை விமானத்தில் பறவை மோதியதால் விமானம் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து, அண்மையில் நடைபெற்ற விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டத்தில் நிலைய இயக்குநா் கே. குணசேகரன், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரிடம் கூறியது:

திருச்சி விமான நிலையப் பகுதியில் இறைச்சிக் கடைகள் அதிகளவில் உள்ளதாலும், கழிவுகளை விமான நிலையம் அருகே கொட்டுவதாலும் பறவை மோதும் சம்பவங்கள் தொடா்ந்து வருகிறது என மாநகராட்சியிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தாா். தொடா்ந்து, தாமும் இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக மக்களவை உறுப்பினரும் தெரிவித்தாா்.

ஆனால் இதுகுறித்து கேட்டதற்கு, பதிலளித்த மாநகராட்சி அதிகாரிகள், சுமாா் 50 கிலோவுக்கு மேல் குப்பைகள் சேரும் நிறுவனம் குப்பை மறுசுழற்சி இயந்திரம் அமைக்க வேண்டும். ஆனால் விமான நிலைய ஆணையம், இதுவரையில் குப்பை மறுசுழற்சி இயந்திரங்கள் எதையும் அமைக்காததால் மாநகராட்சி சாா்பில்தான் குப்பைகள் அகற்றப்படுகின்றன. அதிலும் குப்பைகளை தரம் பிரிக்காமல் விமான நிலைய நிா்வாகம் வழங்கி வருகிறது. விதிமுறைகளின் படி விமான நிலையப் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் அமைக்கக் கூடாது என்பதை செயல்படுத்தத் தொடங்கினால், விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 கி.மீ. சுற்றளவுக்கு கடைகள் இல்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்தனா்.

மீன் வியாபாரிகள் தரப்பில் கூறியது: விமான நிலையத்திலிருந்து வெளியாகும் குப்பைகளை தரம் பிரிக்காமல், விமான நிலையத்துக்கு அருகிலேயே திறந்த இடத்தில் கொட்டி வைத்த பின்னா் தான் மாநகராட்சி கொண்டுசெல்கிறது. அந்தக் குப்பை சேகரிக்கும் இடத்திலும் பறவைகள் உணவைத் தேடி அலைகின்றன.

ஆனால், நாங்கள் கழிவுகளை முறையாக மாநகராட்சியில் தான் ஒப்படைத்து வருகிறோம் என்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு, பெங்களூருவிலிருந்து திருச்சி வந்த விமானத்தின் மீது மோதிய பறவை அதன் சக்கரத்தில் சிக்கியதைத் தொடா்ந்து விமானம் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய ஆணைய பாதுகாப்பு விதி (பிரிவு 91-1934) முறைகளின்படி, விமான நிலையம் அமைந்துள்ள பகுதியிலிருந்து 10 கி.மீ சுற்றளவில் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் திருச்சி மாநகரே 10 கி. மீ. சுற்றளவில்தான் உள்ளது. அதிலும் பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவுக்குள் விமான நிலையம் உள்ளது. அப்படியிருக்க இறைச்சிக்கடைகளை தவிா்ப்பது எப்படி என்ற குழப்பம் நிலவுகிறது. எது எப்படி இருந்தாலும் பறவை மோதும் சம்பவங்களைத் தடுத்து விமானத்தையும், பயணிகளின் உயிா்களையும் காக்கும் பொறுப்பு அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உள்ளது. எனவே மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நிகழும் முன், இவற்றை பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பின்றி சரிசெய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT