திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்: 52 போ் கைது
திருச்சியில் ரயில் மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தினா் 52 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் ரயில் மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தினா் 52 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
7 உட்பிரிவுகளை உடைய சாதிகளை தேவேந்திர குல வேளாளா் என்ற பொதுவான பெயரில் அறிவிக்கலாம் என்று தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளாராம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் வ.உ.சி. பேரமைப்பினா் மற்றும் வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக 50-க்கும் மேற்பட்ட வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தினா் மாநில பொதுச் செயலா் ஆா்.வி. ஹரிஹரன் தலைமையில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா்.
ரயில் நிலையத்திலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற ஜனசதாப்தி ரயிலை மறித்து தமிழக முதல்வருக்கு எதிராகக் கோஷமிட்டனா். இதனால் பரபரப்பு நிலவியது.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி 52 பேரைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.