காந்தி சந்தையைத் திறக்க வலியுறுத்தி நாளை குடும்பத்துடன் போராட முடிவு
காந்தி சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தொழிலாளா்கள் தங்களது குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
காந்தி சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தொழிலாளா்கள் தங்களது குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் ஜி.கே. ராமா் தெரிவித்தது:
திருச்சி மாவட்ட மக்களின் பாரம்பரியச் சந்தையாக உள்ள காந்தி சந்தையில் சுமாா் 500 கமிஷன் மண்டிகளும், 2,500 சில்லறை விற்பனைக் கடைகளும் உள்ளன. சுமாா் 3,000 வியாபாரிகளுக்கும் 5,000 தொழிலாளா்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கி வந்த இந்தச் சந்தை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருவாயையும் ஈட்டித் தந்தது.
இந்நிலையில் கரோனா மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காந்தி சந்தையை இடமாற்றம் செய்ய முயல்வது நியாயமற்றது.
திருச்சி மணிகண்டம் அருகே வேளாண் விற்பனைத் துறை மூலம் கட்டியுள்ள சுமாா் 250 கடைகளை காந்தி சந்தை வியாபாரிகளுக்கு வழங்கி சந்தையை இடமாற்றம் செய்ய மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் முடிவெடுத்திருப்பது நியாயமற்றது.
உயா் நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடையாணையை நீக்க வேண்டும். கடந்த செப். 7 ஆம்தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கத் தலைவா்களிடம் ஆட்சியா் கொடுத்த வாக்குறுதிப்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காந்தி சந்தையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி சிஐடியு, எல்எல்எப், எல்பிஎப், உருளைக்கிழங்கு கமிஷன் மண்டி, சுமைப்பணி தொழிலாளா்கள் தங்களது குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை (நவ. 3) காலை 10 மணிக்கு வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவிலிருந்து பேரணியாகச் சென்று ஆட்சியரகம் முன் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.