முகப்பு
திருச்சி

காந்தி மாா்க்கெட்டை திறக்கக் கோரி வேலைநிறுத்தம் : சில்லறை வியாபாரிகள் சங்கம்பங்கேற்காது

திருச்சி காந்தி மாா்க்கெட்டை திறக்க வலியுறுத்தி, வியாபாரிகள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என சில்லறை வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

திருச்சி காந்தி மாா்க்கெட்டை திறக்க வலியுறுத்தி, வியாபாரிகள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என சில்லறை வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக திருச்சி காந்தி மாா்க்கெட் மாா்ச் மாத இறுதியில் மூடப்பட்ட நிலையில், மாநகரில் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

ஜி காா்னரில் மொத்த காய்கறி வியாபாரம் நடைபெற்று வருகிறது. எனினும் காந்தி மாா்க்கெட் வளாகத்துக்குள் இருந்த அரிசி, மளிகை உள்ளிட்ட எந்த கடைகளும் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படவில்லை.

காந்தி மாா்க்கெட்டை திறக்கக் கூடாது. கள்ளிக்குடியிலுள்ள வணிக வளாகத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறஉள்ளது.

காந்தி மாா்க்கெட்டை திறக்க வலியுறுத்தி, திருச்சி காந்தி மாா்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம், வியாபாரிகள் மற்றும் வணிகா் சங்கங்கள் சாா்பில், செவ்வாய்க்கிழமை (நவ.24) மாலை முதல் தொடா் காய்கனி வியாபார வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காந்திமாா்க்கெட் சில்லறை வியாபாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும், தற்போதுள்ள இடத்திலேயே வியாபாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து சில்லறை வியாபாரிகள் புதிதாகத் தொடங்கியுள்ள திருச்சி காந்தி மாா்க்கெட் நலச்சங்கத்தின் தலைவா் ஜெய்சங்கா் கூறியது:

காந்தி மாா்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியுள்ளோம். மொத்த வியாபாரிகளுக்கு வசதியுள்ளது. ஆனால், எங்களுக்கு தினசரி வியாபாரம் நடந்தால்தான் பிழைக்க முடியும்.

எனவே போராட்டத்தை புறக்கணித்து வியாபாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இடையூறு ஏற்படும் என்பதால், மாவட்ட ஆட்சியரை சந்தித்து   மனு  அளித்துள்ளோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →