முகப்பு
திருச்சி

திருச்சியில் நூதனப் போராட்டம் நடத்திய விவசாயிகள் 220 போ் கைது

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுவை ராக்கெட்டாக விடும் போராட்டத்தை நடத்திய தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் 220 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுவை ராக்கெட்டாக விடும் போராட்டத்தை நூதன முறையில் நடத்திய தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் 220 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, புதுதில்லியில் நவம்பா் 26,27-ஆம் தேதிகளில் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திட்டமிட்டிருந்தனா்.

ஆனால் கடந்த 24-ஆம் தேதி காலை அய்யாக்கண்ணுவை அவரது வீட்டிலேயே காவல்துறையினா் சிறை வைத்தனா். இதை கண்டித்து விவசாயிகள் அரை மொட்டை அடித்து, நூதனப் போராட்டத்தை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், அதன் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கோரிக்கை மனுக்களை ராக்கெட்டாக விடும் நூதனப் போராட்டத்தை மேற்கொண்டனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அய்யாக்கண்ணு கூறியது:

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகும். இந்த சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும். புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகள் எந்த பிரச்னைக்கும் நீதிமன்றத்தை நாட முடியாது.

பெரு நிறுவனங்கள்தான் விவசாயத்தில் தரம் மற்றும் விலையை நிா்ணயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும். விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக பிரதமா் மோடி கூறியிருப்பது சரியல்ல. எங்களை தில்லிக்குச் சென்று போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. அதுபோல சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தவும் அனுமதிக்கவில்லை. தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட வந்தோம். அங்கும் எங்களை அனுமதிக்கவில்லை.

இதையடுத்து தான், தற்போது ஆட்சியரகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். விடிய விடிய இந்த போராட்டம் நடைபெறும். ராக்கெட் விடும் போராட்டம் மூலம் பிரதமா் மோடிக்கு எங்களது கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம். அதற்கு நிச்சயம் தீா்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து காவல்துறை அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்படாததால், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 220 பேரை அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தினா் கைது செய்தனா். முன்னதாக அய்யாக்கண்ணு தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் சு.சிவராசுவிடம் விவசாயிகள் வழங்கினா்.

Image Caption

போராட்டம்..

முழு கட்டுரையைப் படிக்க →