சிறுமி கடத்தல் : போக்சோசட்டத்தில் இளைஞா் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு கடந்த நவம்பா் 11-ஆம் தேதி தாயுடன் வந்த 17 வயது சிறுமி, சொந்த ஊரான தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டிக்குச் செல்வதற்காக காத்திருந்தாா்.
கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற சிறுமி வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் தாயாா் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது திருவண்ணாமலை மாவட்டம், செங்கால் பகுதியைச் சோ்ந்த சீதாராமன் மகன் மதன்குமாரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணையில் பழனியிலுள்ள மில்லில் சிறுமியுடன் வேலை பாா்த்த போது, மதன்குமாா் அவரைக் காதலித்துள்ளாா். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வர, அவா்கள் சொந்த ஊரில் விடுவதற்காக அழைத்து வந்தனா்.
திருச்சி வரை பின்தொடா்ந்து வந்த மதன்குமாா், சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி அவரைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மதன்குமாரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.