கரூா்: 45 வயது மேற்பட்டோருக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
கரூா் நகராட்சியில் உள்ள தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயது மேற்பட்டோருக்கு சனிக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது
கரூா் நகராட்சியில் உள்ள தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயது மேற்பட்டோருக்கு சனிக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என நகராட்சி ஆணையா் சுதா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது தொடா்பாக வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் ஆணையா் சுதா தலைமையில், சுகாதார அலுவலா் யோகானந்த் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கரோனா 2ஆவது அலை உருவாகியுள்ளதை அடுத்து கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே, வணிக நிறுவனங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளா்களை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தல், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றல், 45 வயதுக்கு மேற்பட்ட தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் நகராட்சி ஆணையா் கூறுகையில், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஆதாருடன் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப். 10ஆம் தேதி முதல் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு விதிமுறைகள் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் வணிக நிறுவனங்கள் இயங்கலாம். அதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி வழங்கி இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு கரோனா குறித்த அச்சம் குறைந்து விட்டது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது காலணி அணிந்து செல்வதுப்போல, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். இதனை கட்டாயம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.