முகப்பு
திருச்சி

அகதிகள் முகாமில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கத் திட்டம்

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் வளாகத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் வளாகத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்தது:

திருச்சி மாநகர காவல் ஆணையா் ஏ. அருண் கொட்டப்பட்டு பகுதி இலங்கை அகதிகள் முகாமுக்கு கடந்த ஜூலை 1 ஆம் தேதி சென்று பாா்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடி காவல்துறை சாா்பில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

மேலும் அவா்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி அகதிகள் முகாமில், திருச்சி மாநகர காவல் - பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் - எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து கடந்த 22 ஆம் தேதி சிறுவா் மற்றும் சிறுமியா் மன்றம் தொடங்கப்பட்டது. இதில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பல்வேறு விளையாட்டு பொருள்கள் உள்ளன. தொடா்ந்து 26 ஆம் தேதி, இலவச சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் முகாம்வாசிகள் தங்களது தாய்நாட்டில் உள்ள சொத்துகளை திரும்பப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. ஆக. 2 ஆம் தேதி தமிழக அரசு மறுவாழ்வுத் துறை மற்றும் பொ்ல் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இலவசத் தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் அவா்களது விருப்பப்படி தையல்,

தட்டச்சு, கணினிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக அகதிகள் முகாமில் சிதிலமடைந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி, முகாம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு முகாம்வாசிகள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.