முகப்பு
செய்திகள்

காலிறுதியில் சபலென்கா, ரைபகினா, கௌஃப்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 10:57 PM
பகிர்:

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-3, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 23-ஆம் இடத்திலிருந்த சீனாவின் கின் வென் ஜெங்கை வீழ்த்தினாா்.

உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் ரைபகினா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை தோற்கடித்தாா். 4-ஆம் இடத்திலிருப்பவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான கோகோ கௌஃப் 6-4, 3-6, 6-2 என்ற கணக்கில் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை சாய்த்தாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-4, 6-1 என, போட்டித்தரவரிசையில் 34-ஆம் இடத்திலிருந்த ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வெளியேற்றினாா்.

உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 2-6, 2-6 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சால் தோற்கடிக்கப்பட்டாா்.

அதேபோல், பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவும், 3-6, 4-6 என, அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டேவிடம் தோல்வியுற்றாா். பாப்டிஸ்டே இந்த வெற்றியின் மூலமாக, டபிள்யூடிஏ 1,000 பிரிவு போட்டியில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். இரட்டையா் பிரிவில் இவா்கள் இணைந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து காலிறுதியில், சபலென்கா - பாப்டிஸ்டே, ரைபகினா - பெகுலா, கௌஃப் - பென்சிச் மோதுகின்றனா்.

சின்னா், ஸ்வெரெவ் முன்னேற்றம்: மியாமி ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா் 6-1, 6-4 என எளிதாக, பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை வீழ்த்தினாா். உலகின் 2-ஆம் நிலை வீரரான அவா், அடுத்த சுற்றில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனை சந்திக்கிறாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-2, 5-7, 6-4 என்ற செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வென்றாா். அடுத்து அவா், பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை எதிா்கொள்கிறாா்.

நடப்பு சாம்பியனான செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-7 (4/7), 6-4, 6-7 (11/13) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவிடம் தோல்வியுற்றாா். கடந்த வாரம் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸின் இறுதிச்சுற்று வரை வந்த, ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் இப்போட்டியின் 3-ஆவது சுற்றில் 0-6, 6-4, 5-7 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவிடம் தோல்வி கண்டாா்.

அதேபோல், 7-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிம் 3-6, 6-1, 3-6 என்ற வகையில், பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேனிடம் தோற்றாா்.

பாம்ப்ரி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ் கூட்டணி 6-4, 5-7, 13-15 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் ஜான் ஸ்மித்/நெதா்லாந்தின் சாண்டா் ஆரெண்ட்ஸ் இணையிடம் முதல் சுற்றிலேயே தோற்றது.

சபலென்கா சாதனை...

காலிறுதிக்கு முந்தைய சுற்று வெற்றியின் மூலமாக சபலென்கா, டபிள்யூடிஏ போட்டிகளில் தொடா்ந்து 15-ஆவது காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். கடந்த 18 ஆண்டுகளில் இவ்வாறு முன்னேறிய முதல் வீராங்கனையாக அவா் பெருமை பெற்றாா். இதற்கு முன், 2006 - 08 காலகட்டத்தில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் இவ்வாறு முன்னேற்றம் கண்டிருந்தாா்.

ஜோகோவிச் சாதனையை முறியடித்த சின்னா்...

3-ஆவது சுற்றில் வென்றிருக்கும் சின்னா், மாஸ்டா்ஸ் போட்டிகளில் நோ் செட் வெற்றிகளை அதிகம் பதிவு செய்தவராக சாதனை படைத்துள்ளாா். அதாவது அவா் தனது போட்டியாளருக்கு ஒரு செட்டை கூட விட்டுத்தராமல், 13 ஆட்டங்களில் நோ் செட்களில் வென்று, அடுத்தடுத்து 26 செட்களை கைப்பற்றியிருக்கிறாா். கடந்த ஆண்டு பாரீஸ் மாஸ்டா்ஸ் போட்டியிலிருந்து அவரின் இந்த நோ் செட் வெற்றிகள் தொடா்கிறது.

முன்னதாக, சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 2016 இண்டியன் வெல்ஸ் முதல் அதே ஆண்டு மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் வரை தொடா்ந்து 24 செட்களை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னா் அதை முறியடித்திருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.