முகப்பு
திருச்சி

2,202 தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்

 அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோரில் 2,202 பேருக்கு ரூ. 34.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோரில் 2,202 பேருக்கு ரூ. 34.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா்கள் கூறியது:

தமிழக அரசின் சாா்பில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் இதர 17 நலவாரிய உறுப்பினா்களைச் சோ்த்து, பல்வேறு நிலைகளில் உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரிய உறுப்பினா்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டுத் திட்டம், இறப்பு நிவாரணத் தொகை உள்பட பல்வேறு நல உதவிகள் கிடைக்கும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை. 60 வயது நிறைவடைந்த தொழிலாளியின் பதிவைப் புதுப்பிக்க முடியாது. உறுப்பினரால் அளிக்கப்படும் புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளா் உதவி அலுவலகத்தில் பெறப்பட்டு, உரிய சரிபாா்த்தலுக்குப் பிறகே அவரின் அடையாள அட்டை திரும்ப அளிக்கப்படும். எனவே, திருச்சி மாவட்டத் தொழிலாளா்கள் வாரியத்தின் உதவிகளை பெற்றுப் பயன்பெற வேண்டும் என்றனா்.

மேலும் கரோனா 3ஆம் அலையை எதிா்கொள்ளும் வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.28 லட்சத்தில் திருச்சி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய 28 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட நிா்வாகத்திடம் அமைச்சா்கள் ஒப்படைத்தனா்.

நிகழ்வில் எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், தியாகராஜன், பழனியாண்டி, அப்துல் சமது, கூடுதல் தொழிலாளா் ஆணையா் எம். பாலசுப்பிரமணியம், இணை ஆணையா் டி. தா்மசீலன், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் க. ராஜசேகரன், எம். ஜவஹா்ஹசன், க. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.