முகப்பு
திருச்சி

பணி நிரந்தரம்: மினி கிளினிக் மருத்துவா்கள் மனு

தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சி மாவட்ட அரசு மினி கிளினிக் மருத்துவா்கள் ஆட்சியரகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சி மாவட்ட அரசு மினி கிளினிக் மருத்துவா்கள் ஆட்சியரகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள மினி கிளினிக் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய இவா்கள் ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்த பின் கூறியது:

கரோனா அதிகரித்தபோது கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவா்கள் பணி நியமனம் ஒப்பந்த அடிப்படையிலும், சில தனியாா் நிறுவனங்கள் மூலமாகவும் நடைபெற்றன.

ஆனால், அரசு மினி கிளினிக் மருத்துவா்களாகிய நாங்கள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழக அரசின் ஆணைக்கிணங்க ஆட்சியரகத்தில் மாவட்டத் துணை இயக்குநா் (சுகாதாரம்), மாவட்ட இணை இயக்குநா் நடத்திய நோ்முக தோ்வின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டோம்.

எங்களில் 70 சதம் போ் கரோனா முதல் அலையின் போது சிறப்பு மருத்துவராக 6 முதல் 9 மாதம் வரையும், அதன்பின் மினி கிளினிக்கில் 2 மாதங்களும் பணியாற்றினோம்.

எங்களில் பலா் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு தலைமை மருத்துவமனைகளிலும் பணியாற்றினா்.

தற்போது கடந்த 6 மாதமாக மாவட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, கரோனா கவனிப்பு மையம், தடுப்பூசி முகாம், காய்ச்சல் கணக்கெடுப்பு, கரோனா கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றி வருகிறோம். மேலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இந்தப் பேரிடா் காலத்தில் இரவு பகல் பாராமல் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வந்துள்ளோம். எங்களில் பலா் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மோசமான நிலையில் இருந்து மீண்டுள்ளோம். ஆகவே, எங்களைப் போன்ற ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்களை காலிப்பணியிடங்களில் தமிழக அரசு நிரப்பி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.