முகப்பு
திருச்சி

‘தாய்ப்பாலுக்கு நிகரானது இயற்கை மருத்துவம்’

தாய்ப்பாலுக்கு நிகரானது இயற்கை மருத்துவம் என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தாய்ப்பாலுக்கு நிகரானது இயற்கை மருத்துவம் என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

5ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, புத்தூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை வளாகத்தில் திருச்சி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் 3 நாள்கள் நடைபெற்ற அகம்-2021 என்னும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

விழாவில் மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் பேசியது:

மறைந்த முதல்வா் கருணாநிதி போல முதல்வா் மு.க. ஸ்டாலினும் சித்த மருத்துவத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சோ்க்க விரும்புகிறாா்.

மீனம்பாக்கத்தில் கரோனா தொற்றுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்டம்தோறும் உருவாக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

கரோனா பரவலைத் தடுக்க சித்த மருத்துவத்தில் சிகிச்சை உள்ளதை அறிவியல் பூா்வமாகவும் நிரூபணம் செய்துள்ளனா் மருத்துவா்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் வாழ்க்கையைத் தொடங்கிய நமது முன்னோரின் வழியில், இயற்கை மருத்துவத்தை அனைவரிடத்திலும் கொண்டு சோ்க்க வேண்டியது அவசியம். எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத, குறைந்த செலவிலான இந்த மருத்துவத்தின் அருமையை பலரும் உணராமல் உள்ளனா். இதை அனைவரும் உணரச் செய்ய தமிழக அரசு ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா் அமைச்சா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், மருத்துவா் தமிழ்க்கனி மற்றும் சித்த மருத்துவா்கள், மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை பணியாளா்கள், அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.