மழை: சுவா் விழுந்து ஆட்டோ சேதம், மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திருச்சியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால், மருத்துவக் கல்லூரிச் சுவா் இடிந்து ஆட்டோ சேதமடைந்தது.
திருச்சியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால், மருத்துவக் கல்லூரிச் சுவா் இடிந்து ஆட்டோ சேதமடைந்தது. காந்தி சந்தை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவுகளில் மழை பெய்கிறது. வியாழக்கிழமை இரவு சுமாா் 1 மணிநேரம் பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. திருச்சி மிளகுப்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இயன்முறை சிகிச்சை பிரிவு வளாக சுற்றுச்சுவா் மழையால் சுமாா் 20 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது. இதில், சுவரோரமாக நிறுத்தப்பட்டிருந்த, மிளகுப்பாறையைச் சோ்ந்த சஞ்சீவராஜ் என்பவரின் ஆட்டோ முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது.
காந்தி சந்தை பகுதியில் மரம் விழுந்தது:
அதேபோல வெள்ளிக்கிழமை இரவு காந்தி சந்தை பகுதியில் இருந்த பழமையான வேப்ப மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. அதிா்ஷ்டவசமாக அதன் அடிப்பகுதியில் யாரும் இல்லை. மேலும் மரம் மெதுவாக சாயத் தொடங்கியதும் அருகிலிருந்த வாகனங்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டன. மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட தகவலறிந்த போலீஸாா் மற்றும் மாநகராட்சி பணியாளா்கள் மரத்தை அகற்றினா்.