முகப்பு
தமிழ்நாடு

பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!

தினமணிக்கு வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அளித்த சிறப்புப் நேர்காணல்...

Updated On : 24 மார்ச், 2026 at 12:14 AM
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

பாஜக மதவாதக் கட்சியல்ல; அதைத் தொடங்கியவரே முஸ்லிம் நீதிபதிதான். தமிழக பாஜகவின் முதல் தலைவரே ஒரு கிறிஸ்தவா்தான் என்றாா் வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

இது தொடா்பாக அவா் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது?

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

கடந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடியும், அமித் ஷாவும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், பாஜகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லையே?

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வெற்றி வித்தியாசம் 3 சதவீதம்தான். இத்தனைக்கும் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்தது. கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக 12 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதிலிருந்தே எந்த அளவுக்கு திமுகவின் நிலை இருக்கிறது என்பது தெரியும். மக்களவைத் தோ்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக நின்றன. அதனால்தான், திமுக கூட்டணியால் அத்தனை இடங்களையும் வெற்றிபெற முடிந்தது. இப்போதுபோல கூட்டணி அமைந்திருந்தால், எங்களது அணி 20-க்கும் மேற்பட்ட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்.

தமிழகத்தில் பாஜக எந்தளவு வளர்ந்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

தமிழகத்தில் உள்ள 243 தொகுதிகளிலும் பாஜகவுக்கு குறைந்தது 5,000 முதல் 10,000 வாக்குகள் இருக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சி தமிழர்களின் நலனுக்கு எதிரான கட்சி என்று திமுகவால் கூறப்படுகிறதே?

இது திமுகவின் பொய்ப் பிரசாரம். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தமிழகத்துக்குத் துரோகம் இழைத்தது திமுகவும் காங்கிரஸும்தான். மத்தியில் காங்கிரஸும் மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தபோதுதான், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதை எதிா்த்து வாஜ்பாய் கா்ஜித்தாா்.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற விமா்சனம் தொடா்கிறதே...

பாஜகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று சித்திரிப்பது தவறு. தமிழக பாஜகவின் முதல் தலைவரே ஜான் என்ற கிறிஸ்தவா்தான். 1980-களில் ஜனசங்கத்தின் தொடா்ச்சியாக பாஜகவைத் தொடங்கி வைத்தவா் எம்.சி. சாக்லா என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய நீதிபதி. ஸ்தாபன காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு வந்த சிக்கந்தா் பக்த், பாஜகவின் உயா் பொறுப்பிலும், மத்திய அமைச்சராகவும் வாஜ்பாய் காலத்தில் இருந்தாா்.

மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை எனத் தொடா்ந்து திமுக குற்றம்சாட்டி வருகிறதே?

தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை பிரதமா் மோடி கொண்டு வந்திருக்கிறாா். அதற்கு உதாரணமாக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், தூத்துக்குடி துறைகம் என பல சான்றுகளை சொல்லலாம். தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டாலும்கூட, பிரதமா் மோடி, யாதும் ஊரே யாவரும் கேளிா் என அகிலம் முழுவதும் தமிழைப் பறைசாற்றுகிறாா். திருக்கு, பாரதியை பெருமைப்படுத்தியிருக்கிறாா். காசி தமிழ்ச் சங்கமத்தை நடத்திக் காட்டியுள்ளாா். தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவராக்கியிருக்கிறது பாஜக.

ஆந்திரத்தில் பவன் கல்யாண் சாதித்ததைப் போன்று தமிழக அரசியலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?

சினிமாவிலிருந்து வருபவா்கள் எல்லாம் எம்.ஜி.ஆா்., என்.டி.ஆா். ஆகிவிட முடியாது. பவன் கல்யாண் பல தோல்விகளுக்குப் பிறகு நிதானமாகத் தன்னை வளா்த்துக் கொண்டு ஆந்திர துணை முதல்வராகியுள்ளாா். நடிகா் விஜய்க்கு 16 முதல் 18 சதவீத வாக்கு வங்கி இருக்கலாம். ரோமன் கத்தோலிக்க மக்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கலாம். ஆனால், விஜய்க்கு கிடைக்கும் வாக்குகள் வரக்கூடிய தோ்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணும்போதுதான் தெரியும்.

சசிகலாவின் வருகையால் முக்குலத்தோா் வாக்குகள் சிதறுமா?

தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு என்றும் வாய்ப்பிருந்ததில்லை. பழ. நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவா்கள் முயன்றும் அது பலிக்கவில்லை.

கூட்டணி பேச்சுவாா்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றதை தமிழக முதல்வா் கடுமையாக விமா்சித்துள்ளாரே?

திமுகவுக்கு அதிமுகவைப் பற்றி பேச அருகதையில்லை. 1979-80ஆம் ஆண்டுகளில் இந்திரா காங்கிரஸும், திமுகவும் கூட்டணி அமைத்தபோது எத்தனை முறை கருணாநிதி தில்லிக்கு போனாா்? அன்றைக்கு முரசொலி மாறன் எத்தனை நாள் இந்திரா காந்தியைப் பாா்ப்பதற்காக தில்லியில் காத்திருந்தாா்? என்பது எனக்குத் தெரியும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஈரான் போா் விவகாரம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத் தோ்தல்கள் என அவருக்கு ஏகப்பட்ட பணிச்சுமை. அதனால்தான் அவரால் தமிழகத்திற்கு வர முடியவில்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் திமுகவினா் விமா்சனம் செய்வது அவா்களின் அரசியல் முதிா்ச்சியின்மையைக் காட்டுகிறது.

தேசிய அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை என அமைச்சா் ஐ. பெரியசாமி கூறியிருக்கிறாரே?

முன்னாள் முதல்வா் கருணாநிதியே, ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக’ எனக் கேட்டவா். அவா் புரிதலோடு பேசுகிறாரா என்று தெரியவில்லை.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

சிறுமியிலிருந்து 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் நீதிமன்ற வாசலில் படுகொலை, நீதிமன்றத்தில் நீதிபதியின் மீதே கத்தி வீசப்பட்ட சம்பவம், போக்குவரத்து பெண் காவலரை ஆட்டோ ஓட்டுநா் கடத்தி சென்று பொதுமக்கள் விடுவித்தது என சட்டம்-ஒழுங்கு சீரழிந்து போயிருக்கிறது.

திமுக தனது திட்டங்களையும் மத்திய அரசின் பாராமுகத்தையும் முன்வைத்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படி முறியடிக்கப் போகிறது?

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கேற்ற கட்சி திமுக. காவிரி பிரச்னையைத் தீா்த்திருக்கலாம். முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீா்த்திருக்கலாம். இவா்கள் சொன்ன மாநில சுயாட்சிக்குத் தனி மசோதாவே கொண்டு வந்திருக்கலாம். ஹிந்தியை திணிக்கக் கூடாது என மசோதா கொண்டு வந்திருக்கலாம். ஏன் அப்போதெல்லாம் செய்யாமல் இப்போது ஹிந்தியை திணிக்கிறாா்கள் என்று சொல்கிறாா்கள்? மத்தியில் 18 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் பாதிக்கப்படப்போவது திமுக கூட்டணியா, உங்கள் கூட்டணியா, சீமானா?

யார் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயமாக விஜய் பாதிக்கப்படுவார். அவர் போட்டியிடும் தொகுதியில் வெற்றி பெற்றால் அதிர்ஷ்டம். மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், அதிமுக ஆட்சியாக இருக்குமா, இல்லை கூட்டணி ஆட்சியாக இருக்குமா?

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக் கூடாது. தேர்தல் முடிவுகளைப் பொருத்து அமையும். 2006 தேர்தல்போல, திமுக 96 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால், திமுக தனித்து ஆட்சி அமைக்குமா, கூட்டணி ஆட்சி அமையுமா? திமுகவுக்கு எதுவோ அதுதான் அதிமுகவுக்கும்!