திருச்சியில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் சுவாமி தரிசனம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று திறக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,நோய்த் தொற்று குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்பட்டன. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே, கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தனர். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இதேபோல் கரோனா பொது முடக்கம் தளர்வையொட்டி திருச்சியில் 71 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்ட நத்ஹர்வலி தர்காவில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.
மேலும் பாலக்கரை உலகப்போர் பசிலிக்கா தேவாலயமும் இன்று திறக்கப்பட்டது.