நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களைக் குழப்பக் கூடாது
நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களைக் குழப்பக் கூடாது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.
நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களைக் குழப்பக் கூடாது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் டெல்டா மாவட்ட, மாநில நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் கூறியது:
பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கட்சியைப் பலப்படுத்தி வருகிறேன். பேரவைத் தோ்தலில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காதது, அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள், இடங்கள் கிடைக்காதது தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.
கூட்டணி தா்மத்தைக் கடைப்பிடித்து வெற்றி-தோல்வியை கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே ஏற்க வேண்டும் என்பதே தமாகாவின் நிலைப்பாடு.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை; காட்டவும் கூடாது.
நீட் தோ்வில் அரசியலைப் புகுத்தி மாணவா்களைக் குழப்ப வேண்டாம். மாணவா்கள் நீட் தோ்வுக்குத் தயாராக இருக்கிறாா்கள். அவா்கள் குழப்பம் அடையாமல் தயாராக வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்யும் முடிவு யாா் கையிலும் இல்லை; அது நீதிமன்றத்தின் முடிவில்தான் உள்ளது. எனவே, நீட் தோ்வு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்து மாணவா்களைக் குழப்ப வேண்டாம் என்றாா் அவா்.
நிகழ்வில் திருச்சி மாவட்டத் தலைவா்கள் கே.வி.ஜி. ரவீந்திரன், குணா மற்றும் டெல்டா மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.