வளைகுடாவில் நிற்கும் 20 இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு
அனைத்து இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன
வளைகுடா பகுதியில் இந்தியக் கப்பல்களுக்கு பாதிப்பில்லை. அவை பாதுகாப்பாக உள்ளதை மத்திய அரசு இன்று (மார்ச் 24) உறுதிபடுத்தியுள்ளது.
இது குறித்து, இன்று(மார்ச் 24) செய்தியாளர் சந்திப்பில் பேசிய கப்பல் போக்குவரத்து துறைச் சிறப்புச் செயலர் ராஜேஷ் சின்ஹா தெரிவித்திருப்பதாவது :
வளைகுடா பகுதியில் அனைத்து இந்திய கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன. கப்பல்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவங்கள் ஏதும் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்படவில்லை. இந்தியாவுக்கான எல்பிஜி ஏற்றிக்கொண்டு இரண்டு சரக்குக் கப்பல்கள் - பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து தாயகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
பாரசீக வளைகுடாவிலிருந்து இரண்டு கப்பல்கள் புறப்பட்டுவிட்ட நிலையில், பாரசீக வளைகுடா பகுதிகளில் இன்னும் 20 இந்திய கப்பல்கள் நிற்கின்றன. அவற்றில் 540 இந்தியர்கள் உள்ளனர்.
மேற்காசிய விவகாரம் குறித்தும் சர்வதேச பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்தும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சர் திங்கள்கிழமை (மார்ச் 23) விவாதித்தார். அதில் குறிப்பாக, எரிசக்தி பாதுகாப்பு குறித்து இருதலைவர்களும் கவலையை வெளிப்படுத்தினர்.
மேலும், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்துடனும் அமைச்சர் பேசினார். அப்போது, மேற்காசியாவில் சண்டையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கே முதன்மை எனும் மகாசாகர் திட்டத்தில் இந்தியாவின் உறுதி நிலைப்பாட்டை அவர் இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்தினார்.
தில்லியில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) தூதர்களுடன் திங்கள்கிழமை சந்திப்பும் நடைபெற்றது. அப்போது, மேற்காசியாவில் இந்திய சமூகத்துக்கு அவர்கள் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட தொடர் ஆதரவுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது” என்றார்.