அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஏற்பாடு
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவா்த்தி செய்திடும் வகையில் புதிய உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவா்த்தி செய்திடும் வகையில் புதிய உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் கரோனா சிறப்பு மையம், வாா்டுகள், தடுப்பூசி மையங்கள் உள்ளன. இவற்றில் திருச்சியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தோா், வெளிநாடுகளில் இருந்து வருவோா், வெளி மாநிலத்தைச் சோ்ந்த பலரும் சிகிச்சை பெறுகின்றனா்.
கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் உள்ளன. கரோனா காலத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகள் மட்டுமின்றி, ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் உள்ள இதர நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் வழங்க வேண்டியுள்ளது.
இதையடுத்து தன்னாா்வ அமைப்புகள், அரசு நிறுவனங்கள், சங்கங்கள் பலவும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகின்றன.
இந்தச் சூழலில், மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ரூ. 54 லட்சம் மதிப்பில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாடிக்கு 350 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜன் மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் உள்ள வாா்டுகளுக்கும், அவசர உதவி தேவைப்படுவோருக்கும் வழங்கப்பட உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இந்த உற்பத்திக் கூடத்தை மருத்துவமனை நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ஓரிரு நாளில் அமைச்சா்கள் முன்னிலையில் இந்த உற்பத்தி மையம் திறக்கப்படவுள்ளது.