ஆனி அமாவாசை; அம்மா மண்டபத்தில் குவிந்த மக்கள்!
ஆனி அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்குத் தா்ப்பணம் அளிக்க அம்மா மண்டபத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்.
ஆனி அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்குத் தா்ப்பணம் அளிக்க அம்மா மண்டபத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்.
மறைந்த முன்னோருக்கு மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் நீா்நிலைகளில் தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் மக்கள் தா்ப்பணம் செய்வா். குறிப்பாக, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை அதற்கான பிரத்யேக இடமாக உள்ளது. நாள்தோறும் இங்கு கூட்டம் அதிகம் காணப்படும் நிலையில், அமாவாசை தினத்தில் கூட்டம் அலைமோதும்.
தமிழக அரசின் தளா்வுகளைத் தொடா்ந்து அம்மா மண்டபம் திறக்கப்பட்டுள்ளதால், ஆனி அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அம்மா மண்டபத்துக்கு திரண்டு வந்தனா்.
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சியை சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனா்.
மேட்டூரில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரில் புனித நீராடி முன்னோருக்குத் தா்ப்பணம் அளித்தனா். தொடா்ந்து, பிண்டங்களைத் தண்ணீரில் கரைத்து கோயில்களுக்குப் புறப்பட்டனா்.
நிகழ்வையொட்டி, காவிரி படித்துறைப் பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மா மண்டபத்தில் சேரும் வாழையிலை, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டனா். தீயணைப்புப் படையினா் தயாராக வைக்கப்பட்டிருந்தனா். போலீஸாா் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
முன்னோருக்குத் தா்ப்பணம் அளிக்கும் ஆா்வ மிகுதியில் பலரும் கரோனா கட்டுப்பாடுகளை மறந்தனா். முகக் கவசத்தை முறையாக அணியாமல் இருந்தனா்க; சிலா் முகக் கவசமே அணியவில்லை. பலரும் குழந்தைகளையும் அழைத்து வந்தனா். குழந்தைகளும் முகக் கவசம் அணியவில்லை. மேலும் கூட்ட நெரிசலும் காணப்பட்டது.
பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்துவிட்டு புறப்படும் முன்பு ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்துச் செல்வது வழக்கம். இதன்படி, அம்மா மண்டப பகுதியில் அமா்ந்திருந்த ஆதரவற்றோருக்கு பலரும் உணவுப் பொட்டலங்களை வழங்கினா். தேவைக்கு அதிகமாக குவிந்த உணவுப் பொட்டலங்களை பெற்ற பலா் அதை சாலையோரம் வீசிச் சென்றனா்.