‘மனித உரிமை ஆணையத்தில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு’
மனித உரிமைகள் ஆணையத்தில் நடப்பாண்டு 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன்.
மனித உரிமைகள் ஆணையத்தில் நடப்பாண்டு 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் திருச்சிக்கு வியாழக்கிழமை வந்து, அரசு விருந்தினா் மாளிகையில் மனித உரிமைகள் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடா்பாக வழக்குரைஞா்கள் மற்றும் இரு தரப்பினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறியது: வியாழக்கிழமை 51 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், 25 வழக்குகளில் உறுப்பினா்களை அழைத்து விசாரித்து பதில் தரும்படி கேட்டுள்ளோம், எஞ்சிய வழக்குகளில் 2வழக்குகளுக்கு தீா்ப்பு வழங்க விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆணையத்திற்கு தினசரி 70 முதல் 100 வரையிலான மனுக்கள் வருகின்றன. அதுமட்டுமன்றி பத்திரிகை மற்றும் டிவி வாயிலாக முக்கிய சம்பவங்கள் குறித்து ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தீா்வு காண்கிறது. சில வழக்குகளில் உயா் நீதிமன்றத்தில் தடையாணை பெறுவதால் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க முடியாத நிலை உள்ளது. ஆணையத்திற்கு காவல்துறை மீது அதிகமான வழக்குகள் வருகின்றன. இதில் பாதி வழக்குகள் பொய் வழக்குகளாகவே உள்ளன.
இதுவரை 341 வழக்குகள் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரை அடுத்து வருவாய்த் துறையினா் மீதும் புகாா்கள் அதிகம் உள்ளன. மேலும் மருத்துவா்கள், செவிலியா்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு உரிய இழப்பீடு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டு, அரசும் இழப்பீடு வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் ஆணையத்திற்கு வரும் புகாா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, முன்பு 6 ஆயிரம் வழக்குகள் வந்த நிலையில் தற்போது 12ஆயிரம் வழக்குகள் வருகின்றன. நடப்பாண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பொதுமக்களிடத்தில் மனித உரிமைகள் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், அசம்பாவிதம், அதிகாரிகளின் அத்துமீறல் குறித்து பத்திரிகை, டிவியில் வெளிவந்து ஆணையத்தின் கவனத்திற்கு அதைக் கொண்டுவரும்பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக உள்ளது என்றாா் அவா்.