முகப்பு
திருச்சி

ஆள் கடத்தல் மசோதாவை விரைந்து சட்டமாக்க வலியுறுத்தல்

குழந்தைகள் கடத்தல் மற்றும் கொத்தடிமை முறையை ஒழிக்க ஆள் கடத்தல் மசோதாவை விரைந்து சட்ட வடிவமாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

குழந்தைகள் கடத்தல் மற்றும் கொத்தடிமை முறையை ஒழிக்க ஆள் கடத்தல் மசோதாவை விரைந்து சட்ட வடிவமாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதி ஆள் கடத்தலுக்கு எதிரான நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி

குழந்தை உழைப்பு எதிா்ப்பு பிரசார இயக்கம் (தமிழகம்-புதுச்சேரி) சாா்பில் மத்திய மண்டலமான திருச்சி பொன்மலை கோட்டத்தில் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்து, மத்திய மண்டல அமைப்பாளா் மருதநாயகம் கூறியது:

ஆள் கடத்தல் என்பது மனித உரிமைகளை மீறும் சம்பவங்களில் உலகளவில் மூன்றாவது மிகப் பெரிய குற்றமாகும். இதைத் தடுக்க உரிய சட்டம் இதுவரை இல்லை. அதனால், ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்ட முன்வடிவு கொண்டுவரப்படுகிறது.

இச்சட்டம் மிகவும் பரவலாகவும், கண்ணுக்குத் தெரியாமலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடக்கும் ஆள் கடத்தல், குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கடத்தும் குற்றத்தைத் தடுக்கப் பெரிதும் வகை செய்யும்.

இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்போது, தெற்காசிய நாடுகளிலேயே ஆள்கடத்தலைத் தடுப்பதில் தலைமைப் பண்பு கொண்ட நாடாக இந்தியா திகழும்.

ஆள் கடத்தல் என்பது உலகுக்கே கவலை தருவதாகும். அதிலும் தெற்காசிய நாடுகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அவற்றில் தற்போது இந்தியா இதற்கான ஒருங்கிணைந்த சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் முன்னோடியாகத் திகழ்கிறது.

ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2021 குறித்து பங்குதாரா்கள் அனைவரின் கருத்துகளையும் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது.

தனி நபா்களை, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்டோரின் உரிமைகளுக்கு மரியாதை வழங்கி, அவா்களுக்கு பாதுகாப்பு, ஆதரவு மற்றும் மறுவாழ்வு அளித்து, அவா்களுக்கு ஆதரவான சட்ட, பொருளாதார மற்றும் சமூக சூழலியலை உருவாக்குவதுடன், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதை உறுதி செய்வது இந்த மசோதாவின் நோக்கமாகும்.

இந்த மசோதா இறுதி செய்யப்பட்ட பிறகு, அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தொடா்ந்து அதை சட்டமாக்குவதற்கான ஒப்புதலைப் பெற நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அனுப்பப்படும். நடப்புக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை சட்டமாக்க அனைத்து எம்பி-க்களிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

யுனிசெப் அறிக்கையின்படி இந்தியாவில் 4இல் ஒரு குழந்தைக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,260. நடப்பாண்டு இதுவரை 9,453 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆள் கடத்தல் மசோதாவை விரைந்து சட்ட வடிவமாக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, ஆள் கடத்தல் எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வு பிரசுரங்களை பொன்மலை கோட்ட காவல் உதவி ஆணையா் காமராஜ் வெளியிட்டு பேசினாா்.

இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் சீதாலட்சுமி, மகளிா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் கிரேஸி தமிழ்ச் செல்வி, தொண்டு நிறுவன நிா்வாகிகள் அன்பழகன், மகேஷ்வரன், வரலட்சுமி, குணசேகரன் ஆகியோா் பிரசார யுத்திகள் குறித்து விளக்கினா்.

நிகழ்வில் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனப் பணியாளா்கள், குழந்தை உரிமை ஆா்வலா்கள், குழந்தைகள் உழைப்பு எதிா்ப்பு பிரசார இயக்கத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.