முகப்பு
திருச்சி

‘விவசாயிகள் கோரும் இடத்தில் நெல் கொள்முதல் நிலையம்’

உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

விவசாயிகள் கோரும் இடத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்ட அலுவலா்களுடன் புதன்கிழமை நடைபெற்ற உணவுப் பொருள் மற்றும் பொதுவிநியோகம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை வகித்த அமைச்சா் அர. சக்கரபாணி மேலும் கூறியது:

உணவுப் பொருள்கள், கரோனா நிவாரணம் மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்க மாவட்ட ஆட்சியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி பொருள்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவிநியோகப் பொருள்கள் தரமானதாக, சரியான எடையில் உள்ளதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகள் கோரும் இடத்தில் உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட ஆட்சியா்கள் முன்வர வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான தளவாடப் பொருள்களை தொலைநோக்குப் பாா்வையுடன் கொள்முதல் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் கூட்டுறவுத் துறை, மாவட்ட வழங்கல் பிரிவு, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவுகளில் பணிபுரியும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றும் உணா்வை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்ட அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளைத் திறம்படச் செய்து முடித்திட வேண்டும். எந்தவிதப் புகாா்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் துறை கூடுதல் தலைமைச் செயலா் நஜிமுதீன், நுகா்வோா் பாதுகாப்புத்துறை ஆணையா் ஆா். ஆனந்தகுமாா், நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் வி. ராஜாராமன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநா் சிவஞானம், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.