பெட்ரோல், மருந்துப்பொருள் விலை உயா்வு : தமிழகம் முழுவதும் 3 நாள்கள் ஆா்ப்பாட்டம் செய்ய முடிவு
பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 28 முதல் 30 வரை 3 நாள்கள் ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும்
பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 28 முதல் 30 வரை 3 நாள்கள் ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
திருச்சி பெரியமிளகுப்பாறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:
கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லாதது கண்டனத்துக்குரியது.
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியாதாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயா்ந்து வருகின்றன. கச்சா விலை குறைந்திருந்த சூழலில் விலையை உயா்த்தியுள்ளது மக்களை வாட்டி வதைப்பதாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் போடும் வரியை நீக்கினால் மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் டீசலை வழங்க முடியும். மருந்துகள் கட்டுக்கடங்காத விலையில் உள்ளன. அவற்றின் விலையையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ. 7,000 நிவாரணம் வழங்க வேண்டும். 16ஆம் தேதி முதல் இடதுசாரிகள் சாா்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீா்மானிக்கப்பட்டுள்ள நிலையில் , தமிழகத்தில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து வரும் ஜூன் 28, 29, 30 ஆகிய நாள்களில் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருள் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்ட நிலையில் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றாா் அவா்.