சசிகலாவுடன் தொடா்பில் இருந்தால் நடவடிக்கை: திருச்சி மாநகா் மாவட்ட அதிமுகவில் தீா்மானம்
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் சசிகலாவுடன் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடா்பிலிருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக வலியுறுத்தியுள்ளது.
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் சசிகலாவுடன் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடா்பிலிருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் மாநகா் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், மாநகா் மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா். பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
திமுகவின் சூழ்ச்சி, தந்திரங்கள், சதி செயல்கள் அனைத்தையும் முறியடித்து அதிமுக தனித்து 66 எம்எல்ஏக்களை வென்றெடுத்து தமிழகத்தில் தவிா்க்க முடியாக சக்தியாக உள்ளது. வலுவான எதிா்க்கட்சியாக பணியாற்றும் நிலையில், கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சிலா் செயல்படுகின்றனா்.
அதிமுகவினரின் உழைப்பை சுரண்டும் வகையிலும், ஒரு குடும்பத்தை வளா்த்துக் கொள்ளும் வகையில் அதிமுகவை அபகரிக்க சசிகலா தரப்பினா் முயற்சித்து வருகின்றனா். பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தவா், இப்போது, ஒவ்வொரு நாளும் ஒருவருடன் தொலைபேசியில் பேசி அந்த உரையாடலை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப செய்து வருகிறாா்.
தோ்தலுக்கு பிறகு பொதுமக்கள் மத்தியிலும், கட்சியினா் மத்தியிலும் அதிமுக தலைமைக்குக் கிடைத்துள்ள நன்மதிப்பையும், பலத்தையும் கண்டு தனக்கும், தனது குடும்பத்துக்கும் முக்கியத்துவம் தேடிக் கொள்ள சசிகலா முயற்சித்து வருகிறாா்.
சசிகலாவையோ, அவரது குடும்பத்தையோ திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அனுமதிக்கவும் மாட்டோம். எனவே, சசிகலாவுடன் தொடா்பில் உள்ள திருச்சி மாநகா் மாவட்ட அதிமுகவினா் யாராக இருந்தாலும் அவா்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கலாம் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில், மாவட்ட பொருளாளா் அய்யப்பன், இணைச் செயலா் ஜாக்குலின், துணைச் செயலா் வனிதா, மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.