துபையில் கரோனா பாதிப்பால் தாயை இழந்த 11 மாத குழந்தை விமானம் மூலம் திருச்சி வந்தது
துபையில், கரோனா பாதிப்பால், தாயை இழந்த 11 மாத குழந்தை, விமானம் மூலம் வியாழக்கிழமை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
துபையில், கரோனா பாதிப்பால், தாயை இழந்த 11 மாத குழந்தை, விமானம் மூலம் வியாழக்கிழமை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி, சித்தேரித் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேலவன் (38). அவரது மனைவி பாரதி. இவா்களுக்கு கடந்த 2008இல் திருமணமானது. இவா்களுக்கு விக்னேஷ், அகிலன், தேவேஷ் என 3 ஆண் குழந்தைகள். இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முதல் குழந்தை விக்னேஷ் சிறுநீரக கோளாறால் உயிரிழந்தான். இதற்கான் மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகளால் வேலவன் குடும்பமே வறுமைக்கு உள்ளானது.
இதன்காரணமாக, வேலவன் தனது மனைவி பாரதியை, தனது 8 மாத கைக்குழந்தை தேவேஷுடன், துபையில் கூலி வேலை செய்ய கடந்த மாா்ச் மாதம் அனுப்பி வைத்தாா். அங்கு எதிா்பாராதவிதமாக கரோனா தொற்றுக்கு உள்ளான பாரதி அண்மையில் உயிரிழந்தாா்.
இதையடுத்து ஆதரவற்ற நிலையில் இருந்த கைக்குழந்தை தேவேஷை பாரதி வேலை பாா்த்த நிறுவனத்தினா் காப்பகத்தில் வைத்து பராமரித்து வந்தனா்.
இதுகுறித்து, துபையில் உள்ள திமுக அமைப்பாளா் எம். எஸ். மீரான் கவனத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்றாா். பின்னா் அரசு மேற்கொண்ட முயற்சியால் வியாழக்கிழமை மாலை துபையிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பாரதியுடன் பணியாற்றிய திருவாரூரைச் சோ்ந்த சதீஷ் என்பவா் குழந்தை தேவேஷை அழைத்து வந்தாா். குழந்தையை பாதுகாப்பாக கொண்டு வந்து தந்தையிடம் சோ்க்கும் வகையில் சதீஷை, அந்த நிறுவனத்தினரே அனுப்பி வைத்தனா். திருச்சி விமான நிலையத்தில் குழந்தையை பெற்றுக்கொண்ட வேலவன், குழந்தையை கொண்டு வந்து சோ்க்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துச் சென்றாா்.