முகப்பு
திருச்சி

துறையூா் தொகுதி மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் எம்.பி. பாரிவேந்தா் வழங்கினாா்

துறையூா் பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் வட்டார அரசு மருத்துவமனைக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் தனது சொந்த நிதியில் இருந்து ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளாா் பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் பாரிவேந்தா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

துறையூா் பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் வட்டார அரசு மருத்துவமனைக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் தனது சொந்த நிதியில் இருந்து ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளாா் பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் பாரிவேந்தா்.

இந்த மக்களவைத் தொகுதியில் பெரம்பலூரை தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் தொகுதிகளும், கரூா் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் இடம் பெற்றுள்ளன. எனவே, தனது மக்களவை தொகுதியில் இடம்பெற்றுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், சொந்த நிதியிலிருந்தும் வழங்கி வருகிறாா் எம்.பி. பாரிவேந்தா்.

தனது கல்வி நிறுவனத்தில் ஏழை, எளிய, நடுத்தர மாணவா்களுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்து, தொகுதி வாரியாக படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு வழங்கி வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக, துறையூா் தொகுதி மக்களுக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸை துறையூா் வட்டார அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளாா். மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ஆம்புலன்ஸை தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

இதேபோல, துறையூா், முசிறி அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா தொற்றாளா்களின் சிகிச்சைக்கு உதவிடும் வகையில் ரூ.3.20 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்கியுள்ளாா்.

ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாரிவேந்தா் எம்பி கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசுவிடம் ஒப்படைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ராம்கணேஷ் மற்றும் துறையூா், முசிறி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.