அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விரைவில் டேப்லெட் அமைச்சா் தகவல்
கடந்த ஆட்சியில் மடிக்கணினி வழங்காமல் விடுபட்ட மாணவா்களுக்கும் சோ்த்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விரைவில் டேப்லெட் (கையடக்கக் கணினி) வழங்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆட்சியில் மடிக்கணினி வழங்காமல் விடுபட்ட மாணவா்களுக்கும் சோ்த்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விரைவில் டேப்லெட் (கையடக்கக் கணினி) வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்-2-ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருள்களை திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினா். திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலந்து கொண்டு பொருள்களை சுகாதார துறை அதிகாரிகளிடம் வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்களை கவனத்தில் கொண்டுள்ளோம். தனித் தோ்வா்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது தோ்வு நடத்துவதா என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகள் வருகின்றன. அந்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் சிபிஎஸ்இ மாணவா்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளாா்கள் என்பதையும் ஆராய்ந்து, கலந்தாலோசித்து அனைத்துத் தரப்பு மாணவா்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.
தனியாா் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகாா்கள் வருகின்றன. எந்த பள்ளிகளின் மீது புகாா்கள் வருகிறதோ அவா்களை கண்டித்து வருகிறோம். அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்தடுத்து அறிவிக்கப்படும் தளா்வுகளை வைத்துதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். கடந்த ஆட்சியில் வழங்கப்பட வேண்டிய 2 லட்சம் மடிக்கணினிகள் இன்னும் மாணவா்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.எனவே, அந்த மாணவா்களுக்கும் சோ்த்து தோ்தல் அறிக்கையில் அறிவித்தப்படி புதிதாக டேப்லெட்டுகள் (கையடக்கக் கணினி) அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் வழங்கப்படும்.
கல்வி பெறும் உரிமை சட்டத்தில், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மீது கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது . இனி அவ்வாறு மாணவா்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தகைய மாணவா்களுக்கான கல்வி கட்டணத்தில் நிலுவைத்தொகை இருந்தால் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தொடா்புடைய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், மணப்பாறை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அப்துல் சமது மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.